
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அலுவலக வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னிலையாகத் தவறியமையினால், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் முன்னாள் உயர்ஸ்தானிகர் இளவரசர் சைத் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், கொழும்பு தும்முல்ல பகுதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் விமல் வீரவன்ச சந்தேகநபராக பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இதனையடுத்து அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
எனினும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே விமல் வீரவன்ச நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். அவரது சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மஞ்சுள பத்திராஜ, தமது கட்சிக்காரரின் வாகனம் வழியில் பழுதடைந்ததன் காரணமாகவே நீதிமன்றத்திற்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாமல் தாமதம் ஏற்பட்டதாக விளக்கமளித்ததுடன், பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதான நீதவான் போதரகம, குறித்த கோரிக்கையை நாளைய தினம் முறையான நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாகவே முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக நாளைய தினம் வரை சட்டரீதியாக பிடியாணை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

