நேற்றிரவு முதல் மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை தொடர்ந்தும் பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்டி – கபரகலை வீதியில் கெவும்போக் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியின் குறுக்கே சரிந்து விழுந்துள்ளது.

இதனால் கபரகலை, கலாபொக்க, மடுல்கலை, ஹுலுகங்கை, பெத்தேகம, கோமரை மற்றும் பம்பரெல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மரம் முறிந்து விழுந்தபோது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான நீர்க்குழாயின் மீது அது விழுந்துள்ளது. இதனால் நீர்க்குழாயில் வெடிப்பு ஏற்பட்டுப் பெருமளவில் நீர் கசிந்து வீதியில் பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகக் குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்துக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேலும், பன்விலைப் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

