சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞரை விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் அவசர இராஜதந்திர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அலி சப்ரி,
“சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த அனோஜன் சிவராசா என்ற இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் சட்ட அமைப்பை மதிக்கும் அதேவேளையில், இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றத்திற்காக இவ்வளவு கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க முடியாது என்ற கருத்துச் சமுதாயத்தில் உருவாகியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக மனதை புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு கருத்துக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதே கடுமையான தீர்மானமாக உள்ள பின்னணியில், அந்தச் செயலுக்காக ஒரு மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்திற்கு எதிரானதுடன் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.
குறித்த கருத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதை அகற்றுவதற்கும், அது தொடர்பாக பகிரங்க வீடியோ மூலம் மன்னிப்பு கோருவதற்கும் அனோஜன் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
மனவேதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு குற்றத்தின் காரணமாக, ஒரு நபர் மனந்திரும்புவதற்கும், தனது தவறைச் சரிசெய்து கொண்டு மீண்டும் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் உள்ள வாய்ப்பை முற்றாக இல்லாதொழிக்கக் கூடாது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, குறித்த இளைஞருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு சவுதி அதிகாரிகளிடம் கருணையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன் இலங்கை அரசாங்கம் தலையிட்டு அனுஜனுக்காக முறையான சட்ட உதவியை வழங்குவதற்கும், உயர்மட்ட இராஜதந்திர மட்டத்தில் உடனடியாகச் செயற்படும் வகையில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதியையும் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்போது கருணைக்கும் இடமளிக்கப்பட வேண்டும் என்பதுடன், மீண்டும் தனது குடும்பத்தினரிடம் திரும்பி புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு அனுஜனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். R

