செய்யூரில் அமைகிறதா சென்னையின் 2ஆவது விமான நிலையம்? பரந்தூர் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தகவல்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதாக இருந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கே அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியை தமிழக அரசு முதன்மை தேர்வாக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை தொடர்ந்து, சென்னைக்கு இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடங்களை தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதி அரசின் முதல்தேர்வாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள செய்யூரில், மத்திய அரசின் சார்பில் தமிழ்நாடு மின் நிதி நிறுவனம் மூலம் மின் திட்டத்திற்காக முன்னர் கையகப்படுத்தப்பட்ட 623 ஏக்கர் நிலம் தற்போது அரசிடம் உள்ளது. இதனுடன் சேர்த்து சுமார் 300 ஏக்கர் புறம்போக்கு நிலங்களும் அங்கு கிடைக்குமாம்.இந்த பகுதியில் மின் திட்டம் கைவிடப்பட்டதால், அந்த நிலங்கள் தற்போது விமான நிலைய திட்டத்திற்குப் பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என அரசு கருதுகிறதாம்.எனவே இந்த இடத்தை தன்னுடைய முதன்மை தேர்வாக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது தவிர திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மணநல்லூர் பகுதி, விமான நிலைய ஆணையத்தின் சாத்தியக்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இப்பகுதி பழவேற்காடு ஏரிக்கு அருகில் அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் தொடர்பான சில சிக்கல்கள் எழக்கூடும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.
தமிழக அரசு இந்த இரண்டு இடங்கள் தொடர்பாக விமான நிலைய ஆணையத்திடம் தெரிவிக்கும். விமான நிலைய ஆணையம், தனது சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே எந்த இடம் இறுதி செய்யப்படும் என்ற முழுமையான விவரம் தெரியவரும். இதற்கு முன்பு தமிழக அரசு சார்பாக இந்த இடங்கள்ன் சாதக பாதகம் குறித்து அறிக்கை அனுப்பப்படும். இதனை விமான நிலைய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்னர் தான் இடம் இறுதி செய்யப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை முழுமையக தயாரிக்கப்படும்.
இதற்கு எப்படியும் சில , பல மாதங்கள் தேவைப்படும். இருந்தாலும் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதாலும் பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதால் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவும் தமிழக அரசு இதில் வேகம் காட்டி வருகிறது.
தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் இன்னும் சில ஆண்டுகளுக்கு தேவையான விமானப் போக்குவரத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இருந்தாலும், சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயமாகியுள்ளது. அந்த வகையில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விஜய் அரசு பரந்தூர் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தை தேடுகிறது.

