மும்பை அருகே திருமண இணையதளத்தில் போலி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு, தன்னை ஒரு பொறியியலாளர் என அறிமுகப்படுத்தி 30 வயது பெண் மருத்துவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 34 வயது நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் நலசோபாராவைச் சேர்ந்த அந்த நபர், திருமண இணையதளத்தில் தனது கல்வி மற்றும் தொழில் விவரங்களைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை ஒரு “பிளேபாய்” போலவும் அவர் அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து இருவரும் தொடர்பில் இருந்த நிலையில், அப்பெண்ணை நேரில் சந்திக்க அவர் வரவழைத்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வாலிவ் போலீசார், திங்கள்கிழமை அந்த நபரைைக் கைது செய்தனர். தற்போது சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள் மற்றும் திருமண இணையதள சுயவிவரம் உள்ளிட்ட ஆதாரங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதால், கைது செய்யப்பட்ட நபர் சட்டப்படி குற்றமற்றவராகக் கருதப்படுகிறார்.
இந்தச் சம்பவம் திருமண இணையதளங்களில் பதிவிடப்படும் தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
கல்வி, வேலை, குடும்பப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை இணையதளச் சுயவிவரத்தில் இருப்பதை மட்டும் நம்பாமல், நேரில் சந்திப்பதற்கு முன்பு முடிந்தவரை சரிபார்ப்பது பாதுகாப்பானது. குறிப்பாக, ஆன்லைனில் அறிமுகமான நபர்களைத் தனியாகச் சந்திக்கும்போது கூடுதல் கவனம் தேவை என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.

