கோலாலம்பூர்:
மலேசியா முழுவதும் புகைமூட்டத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் 40 மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற காற்றுத் தரக் குறியீடு (IPU) பதிவாகியுள்ளது.
மலேசியக் காற்றுத் தர மேலாண்மை அமைப்பின் (APIMS) தரவுகளின்படி, சிலாங்கூரின் ஜோஹான் செத்தியா பகுதி 182 எனும் புள்ளிகளுடன் நாட்டின் மிக மோசமான காற்றுத் தரப் பதிவை எட்டியுள்ளது.
தீபகற்ப மலேசியாவில் மிகவும் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளாக ஜோஹான் செத்தியா (182), செராஸ் (179), நீலாய் (178), புத்ராஜாயா (176), ஷா ஆலாம் (175), சிரம்பான் (174), பத்து மூடா (172) என்பன உள்ளன. அதேநேரம் பாதிக்கப்பட்ட 40 பகுதிகளும் தீபகற்ப மலேசியாவிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாட்டில் 23 மாவட்டங்கள் ‘மிதமான’ காற்றுத் தரப் பதிவைக் கொண்டுள்ளன: அவற்றில் சரவாக்கின் கூச்சிங் (75), செரியான் IPD (73), சமராஹான் (70), சிபு (66), சபாவில் கோத்தா கினாபாலு பாலிடெக்னிக் (64), கெனிங்காவ் (56), சண்டக்கான் (53) ஆகிய இடங்களும், கெடாவின் அலோர் ஸ்டார் (99), லங்காவி (96), லார்க்கின் (99), பெங்கெராங் (98), கங்கார் (88), கோத்தா பாரு (88) ஆகிய இடங்களும் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் நல்ல காற்றுத் தரம் கொண்ட பகுதிகளாக சரிஃகெய் (47), லிம்பாங் (46), கோத்தா கினாபாலு (45) மற்றும் மிரி ILP (44).ஆகிய இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கலிமந்தான் பகுதியில் காட்டுத்தீ அபாயம் உள்ள இடங்களின் எண்ணிக்கை செப்டம்பர் 12-ல் 301 ஆக இருந்து, நேற்று 808 ஆகப் பெருமளவில் உயர்ந்தது. அங்கு திறந்தவெளி எரிப்பு தொடர்ந்து நீடித்தால், எல்லை தாண்டிய புகைமூட்டம் மேலும் தீவிரமடையும் என ஆசியான் சிறப்பு வானிலை மையம் (ASMC) எச்சரித்துள்ளது.



