‘பிஎம் சூர்யா கர் முஃப்ட் யோஜனா’ (PM Surya Ghar Muft Yojana) என்பது தங்கள் வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை (solar system) நிறுவும் குடும்பங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு திட்டமாகும். இந்த அமைப்பின் திறனைப் பொறுத்து, ரூ.78,000 வரை மானியம் பெறலாம். இது ஆரம்பக்கட்ட முதலீட்டைக் குறைப்பதோடு, மின்சாரக் கட்டணத்தில் சேமிப்பையும் அதிகரிக்கிறது. மேலும், ‘நெட் மீட்டரிங்’ (net metering) வசதி மூலம், உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை மின் தொகுப்பிற்கு (grid) அனுப்பி, அதற்கான கட்டணச் சலுகையைப் (bill credits) பெறும் வாய்ப்பும் இதில் உள்ளது. மாதம் சுமார் ரூ.2,000 மின்சாரக் கட்டணம் செலுத்தும் குடும்பங்களில் பொதுவாக 3 முதல் 4 மின்விசிறிகள், எல்இடி (LED) விளக்குகள், குளிர்சாதனப் பெட்டி (fridge), தொலைக்காட்சி, சலவை இயந்திரம், அலைபேசி சார்ஜர்கள், மடிக்கணினிகள், நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் மிக்சி (mixer) போன்ற சாதனங்கள் பயன்பாட்டில் இருக்கும். சில வீடுகளில் இன்வெர்ட்டர் (inverter) வசதியும் இருக்கலாம். இத்தகைய குடும்பங்களின் மின் நுகர்வு மாதம் சுமார் 250 முதல் 300 யூனிட்கள் வரை இருக்கலாம். இந்தத் தேவைக்கு 3 கிலோவாட் (kW) திறன் கொண்ட கூரை சூரிய மின்சக்தி அமைப்பு போதுமானதாகும். இதற்கு நிழல் படாத, சுமார் 180 முதல் 220 சதுர அடி பரப்பளவு கொண்ட கூரை இடம் தேவைப்படும். இந்த முழு அமைப்பிற்கும் சுமார் ரூ.2.1 லட்சம் செலவாகும். ‘பிஎம் சூர்யா கர் யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற பிறகு, இதன் செலவு சுமார் ரூ.1.32 லட்சமாகக் குறையக்கூடும்.


