ம.இ.கா.வின் முன்னாள் இளைஞர் பகுதி தலைவரும் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற-ஆட்சிக்குழு உறுப்பினருமான டத்தோ வி.எல்.காந்தன் ( வயது 89) நேற்று காலமானார். டத்தோ வி. எல். கந்தன் 08.8.1937ஆம் தேதி பிறந்தவர். அவர் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் தம்பியுமாவார்.
1982 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுங்கைவே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1978 ஆம் ஆண்டிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவர் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினராக பொறுப்பேற்று இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் உள்ள தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர் வீட்டுடைமை திட்டத்தையும் ஈயச் சுரங்க தொழிலாளர் வீட்டுடமைத் திட்டத்தையும் துரிதப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
இன்றைக்கு சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலாதோட்டங்களில் வீட்டுடமைத் திட்டங்களும், ஈயச் சுரங்கத் தொழிலாளர்களின் வீட்டுடமைத் திட்டங்களும் தோன்றியது என்றால் அதற்கு டத்தோ வி.எல். காந்தன் அவர்களின் அறிய முயற்சியும் அவரின் உழைப்புதான் காரணமாகும்.
டத்தோ வி.எல். காந்தன் அவர்கள் ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவராக பொறுப்பேற்று இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று இன்றளவும் பேசப்படுகின்றது. அரசியலில் மிகவும் கண்ணியமானவர், நாணயமானவர் என்ற பெயருக்குச் சொந்தக்காரராகவும் டத்தோ வி.எல். காந்தன் திகழ்ந்தார். பூச்சோங் சாலை எட்டாவது மைலில் அமைந்துள்ள மறு குடியேற்றப் பகுதிக்குத் “தாமான் டத்தோ காந்தன்” எனப் பெயர் சூட்டப்பட்டு இருப்பது தொகுதி மக்களுக்கு அவர் செய்த சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இன்றும் நிலைக்கிறது .



