கோலாலம்பூர்:
அம்பாங், ஜாலான் பெம்பானில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றில் சட்டவிரோதமாகக் குடிநுழைவுத் துறை சார்ந்த சேவைகளை வழங்கி வந்த வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதியை மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) கைது செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.15 மணியளவில், புத்ராஜெயா குடிநுழைவுத் தலைமைச் செயலகத்தின் உளவு மற்றும் விசேட நடவடிக்கைப் பிரிவினர் ஒரு மாத காலப் புலனாய்விற்குப் பிறகு இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் 34 வயதுடைய வியட்நாமிய தம்பதி கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட தம்பதியினர், குறிப்பாக மலேசியாவில் உள்ள வியட்நாம் நாட்டினருக்கு விசா கால நீட்டிப்பு, சிறப்பு விசா மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகள் (PATI) தாயகம் திரும்புவதற்கான விமான பயணச்சீட்டுகளைப் பெற்றுத் தருவது போன்ற சேவைகளை சட்டவிரோதமாக வழங்கி வந்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு RM12,000 வரை கட்டணம் வசூலித்துள்ளனர்” என்று, டத்தோ ஜக்காரியா ஷாபான் கூறினார்.
சோதனையின் போது 7 வியட்நாம் கடப்பிதழ்கள் (Passports), வியட்நாம் அதிகாரிகளின் 5 போலி முத்திரைகள் (Stamps) மற்றும் அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘ஃபோர்டு கூகா’ (Ford Kuga) ரக வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், அந்த வீட்டில் அவர்களின் 10 மாத ஆண் குழந்தையும் இருந்தது என்றும், சோதனையில் கணவன் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் தங்கியிருந்ததும் (Overstaying), மனைவி பணிப்பெண் விசாவில் (PRA) இருந்ததும் தெரியவந்தது. குழந்தையிடம் முறையான பயண ஆவணங்கள் எதுவும் இல்லை.
இச்சம்பவம் தொடர்பாகப் பாஸ்போர்ட் சட்டம் 1966 மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி முத்திரைகள் தயாரிப்பில் வேறு நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



