கோலாலம்பூர்:
மலேசியாவின் புதிய துணை போலீஸ் படைத் தலைவர் நியமனம் தொடர்பான அரசியலமைப்பு சார்ந்த நடைமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கூலிமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
கூட்டரசு அரசியலமைப்பின் விதிகளுக்குட்பட்டு, போலீஸ் படைத் தலைவர் மற்றும் துணை போலீஸ் படைத் தலைவர் ஆகிய உயர் பதவிகளுக்கான நியமனச் செயல்முறைகளில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் கருத்தைப் பெறுவது கட்டாய நடைமுறையாகும். தான் தலைமை தாங்கும் போலீஸ் படை ஆணையம் (SPP) மூலமாக தகுதியான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அனைத்துக் கட்ட கலந்தாலோசனைகளும் பூர்த்தியாகிவிட்டதாக அமைச்சர் சைஃபுடின் சுட்டிக்காட்டினார்.
“புதிய துணை போலீஸ் படைத் தலைவருக்கான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துவிட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.” என்று டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
முன்னாள் துணை போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அப்பதவி காலியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post டான் ஸ்ரீ அயோப் கான் ஓய்வுக்குப் பின் காலியான பதவி: அரசியலமைப்பு நடைமுறைகள் நிறைவு — உள்துறை அமைச்சர் தகவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

