India
oi-Halley Karthik
போபால்: மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்து, நான் சரியாக பணியாற்றாததால், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003 தொடங்கி இப்போது வரை 21 ஆண்டுகளாக பாஜகதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. தற்போதைய முதல்வராக மோகன் யாதவ் இருக்கிறார். அப்படி இருக்கையில், அபிஜித் தீப்கே ராஜினாமா கடிதத்தை ஏன் வெளியிட்டிருக்கிறார்? என்று கேள்விகள் விவாதங்களாக எழுந்திருக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தில் பாலகாட் பகுதியில் சமீபத்தில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மோகன் யாதவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நையாண்டியாக இந்த போஸ்ட்டை அபிஜித் தீப்கே பதிவிட்டிருக்கிறார்.
அவரது பதவியில் வெளியாகியுள்ள ராஜினாமா கடிதத்தில், “மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியிலிருந்து எனது ராஜினாமாவை இதன் மூலம் நான் சமர்ப்பிக்கிறேன். பாலகாட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின குழந்தைகள் உயிரிழந்த பிறகு, இந்த நாற்காலியில் தொடர்ந்து அமர எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பையும் ஆதரவையும் சரியான நேரத்தில் வழங்க தவறியதற்கு முதலமைச்சராக நான் பொறுப்பேற்கிறேன். இந்த உயிர்களில் பலவற்றை காப்பாற்றியிருக்க முடியும். அந்த தோல்வியின் பொறுப்பிலிருந்து நான் தப்பிக்க முடியாது.
அவர்கள் மரணத்திற்கு பிறகு நமது அரசு காட்டிய அலட்சியம் வெட்கக்கேடானது. ஆரம்பத்தில் ஒரு குழந்தைக்கு வெறும் ரூ.2 லட்சம் மட்டுமே நாம் இழப்பீடாக அறிவித்திருந்தோம். ஆனால் பழங்குடியின மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகு, ரூ.4 லட்சமாக இழப்பீடு வழங்கினோம்.
இது ஒரு சங்டமான கேள்வியை கேட்க வைக்கிறது அமைச்சர்கள் அல்லது எம்எல்ஏக்களின் குழந்தைகளாக இருந்தாலும் ரூ.4 லட்சம் போதுமானது என்று நாம் நினைத்திருப்போமா? நமது எதிர்வினை, பழங்குடியின குழந்தைகளின் உயிர்களுக்கு நாம் எவ்வளவு குறைந்த மதிப்பை கொடுத்திருக்கிறோம் என்று காட்டுகிறது. இந்த மரணத்திற்கு சுகாதாரத்துறை தோல்வியும் காரணமாகும். பிரதமர் மோடி, வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால் பாலகாட்டின் சில பகுதிகளில் உள்ள பழங்குடியின குடும்பங்கள் இன்னும் ஆற்று நீரைதான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.
மத்தியப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகால பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இருந்தும் கூட, பல பழங்குடியின குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் போதுமான சுகாதாரம் மற்றும் தரமான கல்வி போன்ற அடிப்படை தேவைகளை கூட எங்களால் உத்தரவாதம் செய்ய முடியவில்லை என்பதை இன்று நான் வெட்கத்துடன் தலைகுனிந்து ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருக்கிறது.
இது நையாண்டி ராஜினாமா கடிதம்தான். இருப்பினும் இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மையானவை என்பதால், இந்த கடிதம் பாஜகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.



