கோலாலம்பூர்:
கோலாலம்பூர் – குவாந்தான் சாலையின் கிமீ 138-இல் நேற்றிரவு நிகழ்ந்த கோரச் சாலை விபத்தில், மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த MPV ரக காரின் மீது மோதியதில் 48 வயதுடைய கே. பரமசிவன் என்ற மலேசிய இந்தியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நேற்றிரவு சுமார் 10.40 மணியளவில் இக்கோர விபத்து நிகழ்ந்ததாகத் தெமெர்லோ மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது நசீம் பஹரோன் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட பரமசிவன் லஞ்சாங் பகுதியிலிருந்து மெந்தக்காப் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்திசையில் தெமெர்லோவிலிருந்து லஞ்சாங் நோக்கிப் ‘பெரோடுவா அல்சா’ ரக MPV கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.
சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது, பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசைப் பாதைக்குள் நுழைந்து MPV காரின் மீது பலமாக மோதியதாகக் நம்பப்படுகிறது.
இம்மோதலினால் பரமசிவன் காரின் முன் கண்ணாடியின் மீது தூக்கி வீசப்பட்டு, பின்னர் கீழே விழுந்து சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
இக்கடுமையான விபத்தினால் பலத்த காயமடைந்த பரமசிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகத் தெமெர்லோ, சுல்தான் ஹாஜி அகமத் ஷா (HOSHAS) மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியில் நேரான உலர்ந்த சாலையும் நல்ல வானிலையும் நிலவியதாகவும், மோட்டார் சைக்கிளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கத் தவறிய ஓட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தெமெர்லோ-குவாந்தான் சாலையில்MPV காரின் கண்ணாடியில் மோதித் தூக்கி வீசப்பட்டதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பலி! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

