Tamilnadu
oi-Vishnupriya R
கோவில்பட்டி: சட்டசபையில் கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அவரது சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டதே அது போல் எல்லாம் இப்போது எதுவும் நடக்கவில்லை என சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். மேலும் சட்டசபைக்கு சீமான் வர மக்கள் விரும்பவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் எல்லா மாநில அரசுகளும் கடனில்தான் இருக்கின்றன. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கித் தான் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
கடன் ஒரு பிரச்சினை இல்லை. வளர்ச்சிக்காக சில வேலைகளை, சில செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டும் என்று சொல்லி ஓமந்தூராரில் கட்டிடம் கட்டினார். அதுதான் தற்போது மருத்துவமனையாக மாறியிருக்கிறது.
தலைமை செயலகம் தற்போதுள்ள இடம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடம். அங்கு வாடகைக்குத்தான் தலைமைச் செயலகம் செயல்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு என்று தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி முனைந்தார், அதுவும் முடக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட புதிய தலைமை செயலகம் அமைக்க இடம் பார்த்தார். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும் என்பது கடந்த காலங்களில் எடுத்த முயற்சியினுடைய தொடர்ச்சிதான். இது புதிது அல்ல.
ஆகவே, கடன் என்பதை காரணம் காட்டி தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை தடுக்க முடியாது. எந்த அடிப்படையில் அரசு எப்படி செயல்படுமோ அப்படி செயல்படும். அதனால் அது ஒரு காரணம் அல்ல. தமிழ்நாட்டிற்கு என்று ஒரு தலைமைச் செயலகம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
தியேட்டரில் இருந்து சினிமாக்காரராக வந்தவர்தான் சீமான். அவர் சட்டப்பேரவைக்குத்தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கோ, தமிழ்நாட்டினுடைய முன்னேற்றத்திற்கோ ஒருபோதும் செயல்படாதவர்தான் சீமான்.
வன்மத்தை, வெறுப்பு அரசியலை விதைக்கின்றவர்தான் சீமான். அதனால் அவர் இதை சொல்வதற்கு எந்த தகுதியும் இல்லை. தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி, தமிழ்நாட்டினுடைய மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர். தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர் தந்தை பெரியார். அவரையே மண் என்று சொன்னவர் சீமான்.
வெளியில் இருந்து யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம். டி.டி.வி. தினகரன் போன்றவர்கள், தமிழ் மொழி குறித்து, தமிழ் அரசியல் குறித்து ஆதங்கப்பட்டிருக்கிறார். அவர் ஏதாவது வகுப்பு நடத்தினால் நன்றாக இருக்கும்.
நாங்கள் எல்லோரும் அவரிடம் சென்று படிக்கிறதுக்கு தயாராக இருக்கிறோம். அதுமாதிரி ஏதாவது இருக்கிறதா இல்லையா என்று கேட்டு சொன்னால் தினகரனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இடைத்தேர்தல் இப்போது தான் அறிவித்துள்ளார்கள். ஒவ்வொரு கட்சியாக வந்து ஆதரவு கேட்பார்கள். இப்போது நாங்கள் கூட்டணியாக இருக்கிறோம். எங்கள் கூட்டணி மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி. இது வெற்றி அடையக் கூடிய கூட்டணி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
த.வெ.க.வில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்பார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் பதில் சொல்வார்கள். ஆதரவு கொடுக்கவில்லை என்று இதுவரையில் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. யூகத்தில் எந்த பதிலும் சொல்ல முடியாது. இந்த கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
சட்டசபை என்பது கடந்த காலங்களில் எப்படி செயல்பட்டதோ, வாத பிரதிவாதங்கள் எல்லாமே கடந்த காலங்களில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அவரது சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டது. அப்படியெல்லாம் இப்போது எதுவும் நடக்கவில்லை. ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்கிறோம்.
மின் தட்டுப்பாடு பிரச்சினை குறித்து மின்சாரத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். சட்டப்பேரவையிலும் இது குறித்து பேசியிருக்கிறார். தமிழ்நாட்டில் இனிமேல் மின் தட்டுப்பாடு இல்லாத வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும் என சொல்லியிருக்கிறார். அதன்படி இனிமேல் தமிழ்நாட்டில் கட்டாயம் மின் தட்டுப்பாடு இருக்காது என நம்புறேன்.
100 நாட்கள் என்பது குறைந்த நாட்கள்தான். ஏற்கனவே கடந்த காலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் என்ன செயல்திட்டத்தை முன்
வைத்தோம் என்பது உங்களுக்கு தெரியும். பாஜ., எதிர்ப்பு, அல்லது ஆர்எஸ்எஸ்., இல்லாத இந்தியா, ஆர்எஸ்எஸ்., இல்லாத தமிழ்நாடு என்பதை சொன்னோம். இன்றைக்கு தமிழ்நாடு சட்டசபையில் மிக முக்கியமான தீர்மானங்களை தமிழக முதல்வர் முன்மொழிந்திருக்கிறார்.
குறிப்பாக FCRA Act என்று சொல்லக் கூடிய ஒரு சட்டம், அதாவது, வெளிநாட்டில் நிதி பெற்று இங்கே வந்து என்ஜிஓ.வாக செயல்படக் கூடிய, அதற்கான நிதி வாங்கக் கூடிய ஒரு சட்டம். அந்த சட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தீர்மானம் போடப்பட்ட ஒரு ஆட்சி அல்லது ஒரு சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றம் தான். நம்முடைய முதல்வர் தான்.
தாய்மாமன் சீர் திட்டம் வரும் 25 ஆம் தேதி தொடங்க உள்ளார்கள். அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். இந்த மாதிரியான செயல்பாடுகள் அதிகம் இருக்கிறது. அதனால் கட்டாயம் எதிர்மறையாக இருக்காது, நேர்மறையாக தான் இருக்கும்.
அதிமுகவில் இருந்தவர்கள் தான் த. வெ. க., விற்கு வந்திருக்கிறார்கள். அவர்கள்தான் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆகவே வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

