
மொரட்டுவை ராவத்தாவத்த பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலாளிகளை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
மொரட்டுவை, ரவத்தவத்தை (Rawathawatta) பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் ஓட்டோ சாரதி ஒருவர் மீது நேற்று புதன்கிழமை (09) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ரவத்தவத்தை பகுதியில் உள்ள இமானுவேல் மாவத்தையில் நேற்றிரவு சுமார் 7 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தில் இலக்கு வைக்கப்பட்ட அங்குலான பகுதியைச் சேர்ந்த நபர் எவ்விதக் காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர், மொரட்டுவை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தை அடுத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்யும் நோக்கில் மொரட்டுவை பொலிஸார் இரு விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து, தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

