ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை மிகவும் முக்கியமானது என்றாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் அமாவாசைக்கு தனிச்சிறப்பு உண்டு. அப்படி தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசையை போன்று ஆவணி மாதத்தில் வரும் அமாவாசையும் முக்கியமானதாகும். இது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசைக்கு முன்பு வரும் அமாவாசை என்பதால் பாவங்களை போக்கிக் கொள்ள ஏற்ற நாளாக இது கருதப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், அளவில்லாத நன்மைகளை பெற முடியும்.
ஆவணி அமாவாசை நாளில் செய்ய வேண்டியது
1. திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.
2. முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.
3. வீட்டில் உள்ள நம் முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்ய வேண்டும். சந்தனம், குங்குமம் இட்டு, முன்னோர்களை நினைத்து, காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும்.
4. அமாவாசை நாளில், நம் முன்னோர்களை நினைத்து செய்யும் காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, ஆவணி அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறலாம்.



