விஜய் போட்ட கணக்கு தப்பா..? 4 பக்கமும் சிக்கல் வந்தால் எப்படி..! திருப்பதியால் சென்னைக்கு புது பிரச்சனை..!
சென்னைக்கு 2வது விமான நிலையம் வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திமுக அரசு திட்டமிட்ட பரந்தூர் விமான நிலையத்தை விவசாயிகள் நலன் கருதி விஜய் தலைமையிலான தமிழக அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து விஜய் தலைமையிலான தவெக அரசு சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மாநெல்லூர் ஆகிய 2 மாற்று இடங்களை முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இந்த இரண்டு இடங்களுக்கும் அடுக்கடுக்கான பிரச்சனைகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அண்டை மாநிலமான ஆந்திரா – தமிழ்நாடு எல்லைக்கு அருகில் இருக்கும் திருப்பதி விமான நிலையத்தின் மூலம் மிகப்பெரிய சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

திருப்பதி விமான நிலையம்
விஜய் தலைமையிலான அரசு சென்னைக்கு அருகில் 2வது விமான நிலையத்தை அமைக்க கும்மிடிப்பூண்டிக்கு அருகே உள்ள மாநெல்லூர் கிராமத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு நடத்தி வந்தாலும், திருப்பதி விமான நிலையத்தின் மூலம் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநெல்லூரில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் தான் திருப்பதி விமான நிலையம் இருக்கிறது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வரும் இதே வேளையில், திருப்பதி விமான நிலையம் தனியார்மயமாக்கப்படும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. மத்திய அரசு சுமார் 11 விமான நிலையங்களை 5 தொகுதிகளாக தனியார்மயமாக்கும் திட்டத்தில் திருச்சி விமான நிலையம் இருப்பது போல திருப்பதி விமான நிலையமும் அதில் உள்ளது.
திருப்பதி விமான நிலையம் தனியாருக்கு மாற்றப்பட்டால் பெங்களூரு விமான நிலையம் மூலம் ஓசூர் ஏர்போர்ட் திட்டம் எதிர்கொள்ளும், இருவிமான நிலையங்களுக்கு இடையிலான 150 கிலோமீட்டர் வரம்பு தொடர்பான சிக்கல் வரலாம். இதனால் கும்மிடிப்பூண்டி அருகே விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு இது சிக்கலாக மாறக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தலைமையிலான அரசு 2வது விமான நிலையம் அமைக்க தற்போது தான் ஆய்வு பணிகளை துவங்கியுள்ளது, இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெற்று நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிய குறைந்தது 5 வருடம் ஆகும் என்பதால் அதற்குள் திருப்பதி விமான நிலையம் தனியாருக்கு கைமாறி சர்வதேச விமான நிலையமாக மாறி 150 கிலோமீட்டர் விதி நடைமுறைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைப்பது வெறும் கனவாகமே மாறிவிடுமா என்ற கேள்வி எழுகிறது.
சென்னைக்கு 4 பக்கமும் சிக்கல்..
சென்னைக்கு புதிய விமான நிலையம் தேடுவது மிகவும் சிக்கலானது என பல வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் கூறும் முக்கியமான காரணம் என்ன தெரியுமா, சென்னை மாநகரை சுற்றியிருக்கும் பகுதிகளில் ஏற்கனவே பல முக்கியமான பாதுகாப்பு மற்றும் அணுசக்தி தொடர்பான வான் பரப்புகள் இருப்பது தான் என சுட்டி காட்டியுள்ளனர்.
சென்னைக்கு தெற்கில் கல்பாக்கம் அணுமின் நிலையம், வடக்கில் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், மேற்கில் அரக்கோணத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளி, தெற்குப் பகுதியில் தாம்பரம் விமானப்படை தளம் என முக்கியமான பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன.
இவற்றுக்கு மத்தியில் தான் தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதனால் மற்ற நகரங்களில் எளிதாக தேர்வு செய்வது போல் சென்னை விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்ய முடியாது.
செய்யூர் பகுதியில் இருக்கும் சிக்கல்..
மேலும் 2வது விமான நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் இருந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
பொதுவாக அணுமின் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் விமானங்கள் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அதாவது No Fly Zone ஆக இருக்கலாம், அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியாக இருக்கும். இதனால் விமான நிலையத்தின் ஓடுதளம் கல்பாக்கத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் இல்லாதவாறு அமைக்கப்பட வேண்டும். மேலும் இங்கு விமான நிலையம் அமைக்க அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிகள் கூடுதலாக தேவைப்படுலாம்.
இதோடு புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து வெறும் 40 கிமீ தொலைவிலும் உள்ளது. இதுவும் பிரச்சனையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
கும்மிடிப்பூண்டி பகுதியில் இருக்கும் சிக்கல்..
இதேபோல் கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள மாநெல்லூர் இடம் திருப்பதிக்கு அருகில் இருப்பதை தாண்டி, இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் விண்வெளி மையம் வெறும் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இஸ்ரோவின் ராக்கெட் ஏவப்படும் காலங்கள், சோதனை செய்யப்படும் காலங்களில் இப்பகுதியில் வான்வெளி பாதுகாப்பு பலப்படுத்தப்படும் மற்றும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்படலாம்.
இதுமட்டும் அல்லாமல் ஸ்ரீஹரிகோட்டா வான்வெளி எல்லைக் கட்டுப்பாடுகள் விமானங்களை தினமும் இயக்குவதிலும் சவால் ஏற்படலாம். ஒரு பிசியான விமான நிலையத்திற்கு அவ்வப்போது விமானங்கள் தடை என்பது ஏற்றதாக இருக்காது. இஸ்ரோவின் ராக்கெட்கள், விமானம் போல் குறித்த நேரத்தில் குறித்த நாளில் ஏவ முடியாது, பல முறை ராக்கெட் லன்சிங்-ல் தாமதம் நடந்துள்ளது.
பறவைகள் சரணாலயமும் இருக்கு..
இதோடு, ஒதியூர் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயங்களுக்கு வரும் பிற நாட்டுகளை சேர்ந்த பறவைகளின் பறக்கும் பாதைகளும் புதிய விமான நிலையம் அமைக்கும் முன்பு முக்கியமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. விமானங்களின் பறக்கும் பாதையும், இடம்பெயரும் பறவைகளின் இயற்கையான வழித்தடமும் மோதும் நிலை ஏற்பட்டால் அது மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்.
உலகின் பல நாடுகளில் பறவைகள் இடம்பெயரும் முக்கிய வழித்தடங்களை கருத்தில் கொண்டு விமான நிலையங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தி வருகிறது.
10 ஆண்டுகள் முயற்சி
சென்னைக்கு புதிய விமான நிலையம் அமைக்க ஏற்ற இடத்தை கண்டறியும் ஆய்வுகளும், இடத்திற்கான தேடலும் கடந்த 10 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்பு, இரண்டு இடங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதில் ஒரு இடம் தான் பரந்தூர்.
ஆனால், இப்போது திருப்பதி விமான நிலைய தனியாருக்கு மாறுவதில் இருந்து துவங்கி, கல்பாக்கம் அணுமின் நிலையம், இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா, பறவைகள் பறக்கும் பாதைகள் என பல விஷயங்கள் அடுத்தடுத்து சிக்கலாக மாறுகிறது.

