International
oi-Mani Singh S
ரியாத்: சவுதி அரேபியா தனது நிலப்பரப்பில் 95 சதவீத பாலைவனத்தை கொண்டுள்ள நிலையில், அந்த நாட்டில் வசிக்கும் மக்கள் 3.7 கோடி பேருக்கு குடிநீர் வழங்கும் முறையும் அதற்காக சவுதி அரேபியா கையாளும் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பலரையும் வியப்பையும் நெட்டிசன்கள் இடையே பேசுபொருளாகவும் மாறியுள்ளது. சவுதி அரேபியா தனது குடிநீர் தேவையை எப்படி பூர்த்தி செய்கிறது என்ற விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா அதிக பாலைவனங்களை கொண்ட பகுதியாகும். நதிகளே இல்லாத நாடாக இருக்கும் சவுதி அரேபியாவில் மழையும் அரிதாகவே பெய்கிறது. குறிப்பிட்டு சொல்வது என்றால் அந்த நாட்டின் மொத்த பரப்பளவில் 95 சதவீதம் பாலைவனமே ஆகும். ஓராண்டு பெய்யும் மழையின் அளவு கூட வெறும் 100 மி.மீட்டருக்கும் குறைவாகவே உள்ளது.

எப்படி செய்கிறது?
கோடை காலங்களில் வெப்பத்தின் அளவு 45 டிகிரி செல்சியசை தாண்டும். இவ்வளவு கடுமையான தட்ப வெப்பம் இருந்தாலும் செல்வ மதிப்பில் உலக அளவில் முன்னணி வகிக்கிறது. 40 டிரில்லியன் டாலருக்கும் மேலாக கச்சா எண்ணெய் இருப்பை கொண்டுள்ள சவுதி அரேபியா, எண்ணெய் வளத்தால் பெரும் பொருளாதார பலத்தை கொண்டுள்ளது.
ஓரளவு நல்ல மழை பெய்யும் இந்தியா போன்ற நாடுகளில் கூட கோடை வந்தால் தண்ணீருக்கு திண்டாடும் நிலையில், நதிகளே இல்லாமல் வறண்டு கிடக்கும் சவுதி அரேபியா அந்த நாட்டில் வசிக்கும் 3.7 கோடி மக்களுக்கு தேவையான தண்ணீரை எப்படி வழங்குகிறது என்ற கேள்வி எழலாம். இந்த தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சவுதி அரேபியா வைத்து இருக்கும் நெட்வொர்க்தான் பெரும் வியப்பை அளிப்பதாக உள்ளது.
செயற்கை ஆறுகளாக..
சவுதி அரேபியாவில் பெரும்பாலான மக்கள் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா கடற்கரைப் பகுதிகளில் வசிக்கின்றனர். நாட்டின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சவுதி அரேபியா கடலோரப் பகுதிகளில் இருந்து பாலைவனத்தின் ஆழமான பகுதிகள் வரை பிரமாண்டமான நீர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் நீர் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பைப் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
சவுதி அரேபியாவின் பாலைவனப் பகுதிகளில், இந்த பிரமாண்ட குழாய் அமைப்பு செயற்கையான ஆறுகளைப் போன்று செயல்படுகிறது. இதன் மூலம், தொலைதூர நகரங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் தண்ணீரை அந்த நாட்டு அரசு மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. ஆனால், இந்த குழாய் அமைப்பதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனெனில் சவுதி அரேபியாவில் நிலவக்கூடிய கடுமையான வெப்பம், மணல் நகர்வு மற்றும் பூமிக்கடியில் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றை தாங்கும் வகையில், வலுவான குழாய் அமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.
25 மி.மீ. தடிமன் எக்கு பைப்புகள்
எனவே, வெறும் குடிநீர் பைப்களேயே வலிமையான கார்பன் எக்கு மூலம் உருவாக்கப்படுகின்றன. இந்த குழாய்கள் இயற்கை எரிவாயு, எண்ணெய் ஆகியவை கொண்டு செல்லவே பெரும்பாலும் பயன்படுகிறது. ஆனால், சவுதியில் உள்ள கால சூழலை கருத்தில் கொண்டு தண்ணீருக்கே இந்த வலிமையான குழாய்களே பயன்படுத்தப்படுகின்றன.
சுமார் 25 மி.மீ. தடிமன் கொண்ட எஃகு தகடுகள், பல அச்சுகளில் இயங்கும் ரோலிங் இயந்திரங்கள் மூலம் வளைத்து, சுமார் 1.8 மீட்டர் விட்டம் கொண்ட பிரமாண்ட குழாய்களாக உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழாயின் பகுதியும் 12 முதல் 18 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. துருப்பிடிப்பைத் தடுக்கும் சிறப்பு பூச்சும் இந்த குழாயில் பயன்படுத்தப்படுகிறது. தினமும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.




