பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முயற்சியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சட்டரீதியான ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) நிலுவைத்தொகையான ரூ. 4,500 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மூன்று அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது சேவையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதன் மூலம் பலனடைவர்.
அமைச்சரவையின் அனுமதிக்கமைய, இத்தொகை பின்வருமாறு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
– இலங்கை அரச பெருந்தோட்ட சபை (SLSPC): 3,000 ஊழியர்களுக்கு ரூ. 1,961 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது.
– மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB): 6,123 ஊழியர்களுக்கு ரூ. 2,024 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது.
– எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (Elkaduwa Plantations): 1,000 ஊழியர்களுக்கு ரூ. 503 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்காற்றிய பெருந்தோட்டத் மக்கள், ஓய்வுபெற்ற பின்னரும் முதிய வயதிலும் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் சுகாதார சவால்களைக் கருத்தில்கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் முயற்சியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கக் கொள்கைக்கு அமைவாக, பெருந்தோட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிலுவைத்தொகை வழங்கும் ஆரம்ப நிகழ்வு, கண்டி மாவட்டச் செயலகத்தில் நாளை வியாழக்கிழமை (10) நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தொழில் அமைச்சர் அணில் ஜெயந்த பெர்னாண்டோ, பெருந்தோட்டம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் அமைச்சுச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

