அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்த முயன்ற ஈரானின் ஐந்து மசகு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படைப் போர்க்கப்பல் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) கடந்த இரண்டு நாட்களில் இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்த முற்பட்டதை அடுத்து, ஈரானுக்குச் சொந்தமான ஐந்து மசகு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த இரண்டு தாக்குதல் முயற்சிகளிலிருந்தும் அமெரிக்கப் போர்க்கப்பல் வெற்றிகரமாகத் தப்பியதுடன், அப்பிராந்திய கடற்பரப்பில் தனது ரோந்துப் பணிகளைத் தொடர்வதாகவும், அமெரிக்கப் படை வீரர்கள் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக ஓமான் வளைகுடா கடற்பரப்பில் இருந்த எம்/ரி காவிஸ், எம்/ரி சார்மினார், எம்/ரி ஹொரைசன் 1, எம்/ரி ரியெஸ்கோ ஆகிய நான்கு கப்பல்கள் மீதும், ஈரானின் கார்க் தீவுக்கு அருகில் இருந்த எம்/ரி டெரியா என்ற கப்பல் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தி அவற்றைச் செயலிழக்கச் செய்தன.
தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் குறித்த கப்பல்களிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அவற்றின் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் அதன் பிராந்திய நட்பு அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்கும் பல பில்லியன் டொலர் வலையமைப்பின் ஒரு பகுதியாகவே ஈரான் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவின் இத்தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜோர்டானின் அல் அஸ்ராக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் வொஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான மோதல் நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரான் ஏவிய 18 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகவும், ஏனைய இரண்டு ஏவுகணைகள் ஆளற்ற வெட்டவெளிப் பகுதிகளில் வீழ்ந்ததாகவும் ஜோர்டான் இராணுவம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. அமெரிக்காவின்
அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் மற்றும் ஏவுகணை நாசகாரி கப்பல் ஆகியவற்றின் மீது ஈரானின் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்த முயன்றதைத் தொடர்ந்து, ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் அழித்திருந்த நிலையில், தற்போது இப்புதிய மோதல் வெடித்துள்ளது.

