ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பிற விரோதச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான கடுமையான தடைகளை அறிமுகப்படுத்துவதற்கான சட்டத்தை பிரித்தானியா வெளியிட்டுள்ளது.
இச்சட்டம் வர்த்தகக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதோடு, ஈரானிய கப்பல்களைக் குறிவைப்பதற்கான அதிகாரங்களையும் வழங்குவதாக கூறப்படுகிறது.
அத்தோடு, ஈரானின் பிரித்தானிய நிதி அமைப்புக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், கூடுதல் பொருட்கள், தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய வகையில் வர்த்தகத் தடைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சிறப்பு விதிவிலக்குகள் இல்லாத பட்சத்தில் ஈரானிய விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்குவதைத் தடை செய்தல் ஆகிய நடவடிக்கைகளை இச்சட்டம் உள்ளடக்கியுள்ளது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
துறைசார் கட்டுப்பாடுகள்
“ஸ்னாப்பேக்” (snapback) எனப்படும் பொறிமுறையின் கீழ் ஈரான் மீது ஐ.நா. தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அரசாங்கம் அறிவித்த திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இச்சட்டம் 2015-ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் நீக்கப்பட்ட பல்வேறு துறைசார் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டம்
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய நிதி திரட்டும் திறன் மற்றும் தொழில்நுட்பப் பொருட்களைப் பெறும் திறனையும் மேலும் மட்டுப்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

Image Credit: Reuters
இந்நிலையில், “ஈரானின் அணுசக்தி லட்சியங்களைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் நடவடிக்கைகளை இச்சட்டம் மேலும் வலுப்படுத்துகிறது” என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும் என்றும் பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் டவுட்டி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

