இந்திய ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. சாம்சங் இந்தியாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி தந்துள்ளது. முதல்கட்டமாக சாம்சங் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பிஸ்னஸ் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாம்சங் நிறுவனத்தின் லாபம் அண்மை காலமாக குறைந்து வருகிறது. நுகர்வோர் மத்தியில் தேவை குறைந்துள்ளதும், மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதும், மெமரி சிப் விலை இரு மடங்கிற்கு மேல் அதிகரித்திருப்பதும் இந்நிறுவனத்தின் லாப வரம்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததும் , ஸ்மார்ட்போன் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலையும் ஒட்டுமொத்தமாக நிறுவனத்திற்கு நிதிச்சுமையை தந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் நிதி நிலையை மேம்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை சிறிய அளவில் ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயக்குநர் நிலை அதிகாரிகள் ,குழுத் தலைவர்கள் , மேலும் பல்வேறு கிளைகளில் பணிபுரியும் பிராந்திய மற்றும் பகுதி மேலாளர்கள் இதனால் வேலை இழந்துள்ளனர்.
சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் வணிகத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவில் உள்ள 550 முதல் 600 நிர்வாகிகளில், ஏஜென்சிகள் மூலம் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 25 சதவீதம் வரையிலான பணியாளர்கள் இந்த பணிநீக்கத்தால் பாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 100 பேர் வரை மெயில் அனுப்பப்பட்டுள்ளதாம்.
சாம்சங் நிறுவனம் தினசரி அடிப்படையில் பணிநீக்க கடிதங்களை ஊழியர்களுக்கு வழங்கி வருவதாக பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு நோட்டீஸ் காலம் இல்லை, அதற்கு மாற்றாக, 3 மாத ஊதியம், நிறுவனத்தில் வேலை செய்த ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக 1 மாத ஊதியம் ஆகியவை நஷ்ட ஈடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு சாம்சங் இந்தியாவின் மிக முக்கியமான பிரிவான ஸ்மார்ட்போன் துறை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் இருந்து தற்காலிக விலக்கு பெற்றுள்ளது. அதாவது இந்த பிரிவில் வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு இல்லை. நிறுவனத்தின் முக்கிய வருமான ஆதாரம் என்பதாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் எனபதாலும் மொபைல் பிரிவில் உடனடி ஆட்குறைப்பு இல்லை. இருப்பினும், எதிர்காலத்தில் நிலைமை மதிப்பீடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.
நஷ்டத்தை ஈடுகட்ட செலவுகளை குறைப்பதற்காக சாம்சங் இந்தியா தனது பிராந்திய அலுவலகங்களை ஒன்றிணைத்து வருகிறது. உதாரணமாக, ராஞ்சி மற்றும் பாட்னா, தில்லி மற்றும் குர்கான், பஞ்சாப் மற்றும் சண்டிகார் ஆகிய அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் சில பதவிகள் தேவையற்றதாகிவிட்டன. மேலும், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் தொலைக்காட்சி விற்பனை அணிகளை ஒன்றிணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாம்.
இருந்தாலும் தீபாவளிக்கு பின் இரண்டாம் கட்ட ஆட்குறைப்பு இருக்கக்கூடும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாம்சங் இந்தியா 2025ஆம் நிதியாண்டில் வருவாய் 12% அதிகரித்து 1.1 லட்சம் கோடியை எட்டியிருந்தது. இதில் வீட்டு உபயோக பொருட்கள் 11% பங்கை கொண்டு இரண்டாவது பெரிய பிரிவாக உள்ளது, ஸ்மார்ட்போன்கள் முதலிடத்தில் உள்ளன. ஒட்டுமொத்தமாக நிறுவனம் லாபத்தில் இயங்கினாலும், குறிப்பிட்ட சில வணிக பிரிவுகளில் நிலவும் செலவு அழுத்தங்கள் காரணமாகவே இந்த மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
