இனவழிப்புப் போரும் ஒடுக்குமுறையும் நிகழ்ந்த ஈழ மண்ணில் நினைவே இன்னமும் எம்மைத் திருகிக்கொண்டிருக்கிறது.
முள்ளிவாய்க்கால் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வருவார்கள், மீள்வார்கள், அவர்கள் பற்றிய உண்மைகள் கிட்டும் என்றும் இன்னும் பலவாறும் நினைவில் சுமந்துகொண்டு வடக்கு கிழக்கு அன்னையர்களும் மக்களும் மிக நீள் பயணத்தில் தொடர்கையில், போராடுவதும் போராடியே இறப்பதுமாக நிர்பந்திக்கப்பட்டிருப்பது எத்தனை அநீதியானது?
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கு தமிழர் தேசத்தில் இம்முறையும் போராட்டங்கள், ஊடக சந்திப்புகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் மற்றும் “நீதிக்கான நீண்ட பயணம்” என்ற தொனிப்பொருளிலான அனைத்துலக மாநாடு எனப் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல ஆண்டுகளாகத் தமது உறவுகளின் நிலை என்னவென்பதை அறிந்துகொள்ள முடியாமல் போராடிவரும் குடும்பங்கள், மீண்டும் ஒருமுறை உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி தமது குரலை எழுப்பியுள்ளனர்.
நீதிக்கான நீண்ட பயணம்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “நீதிக்கான நீண்ட பயணம்” அனைத்துலக மாநாடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினையை மீண்டும் சர்வதேச கவனத்துக்குக் கொண்டு சென்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது.
வடக்கு – கிழக்கைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் தரப்பினர், மதத் தலைவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது நீண்டகாலப் போராட்டத்தின் அனுபவங்களையும், இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்தும் தீர்க்கப்படாத கோரிக்கைகளையும் சர்வதேச பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தனர்.
மாநாட்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணியும் இடம்பெற்றது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு குடும்பங்கள் வீதியில் இறங்கினர்.
ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் அந்தப் புகைப்படங்கள் மாறவில்லை; அவற்றை ஏந்திய கைகளில் மட்டும் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில குடும்பங்களில் போராட்டத்தை ஆரம்பித்த பெற்றோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் பிள்ளைகள் இன்று அதே கோரிக்கையுடன் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
ஊடக சந்திப்புக் குரல்கள்
இதுவே காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் துயரத்தின் நீளத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான நிலையாகும். காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி வீதிக்கு வந்த தாய்மார்கள் பலர், தமது பிள்ளைகளைக் கண்டறிய முடியாமலேயே உயிரிழந்துள்ளனர்.
கணவரைத் தேடி போராடிய பெண்கள், தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்தப் போராட்டத்திலேயே கழித்துள்ளனர். இன்று அந்தப் போராட்டத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அனைத்துலக தினத்தை முன்னிட்டு வடக்கு – கிழக்கின் பல மாவட்டங்களிலும் ஊடக சந்திப்புகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது போராட்டத்தின் தற்போதைய நிலையை வெளிப்படுத்தினர்.
அரசாங்கங்கள் மாறினாலும் தமது பிரச்சினைக்கான தீர்வு மாறவில்லை என்றும், பல்வேறு ஆணைக்குழுக்கள் மற்றும் அரச பொறிமுறைகள் உருவாக்கப்பட்டபோதும் தமது உறவுகளின் நிலை தொடர்பாக நம்பகமான பதில் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அரசின் அநீதியான அணுகுமுறை
இதற்கிடையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமக்குப் பதில் வேண்டும், நீதியே வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவட்ட செயலகத்துக்கு வெளியே நின்ற அவர்களை பொலிஸார் இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேற்றிய சம்பவமும் விமர்சனத்துக்குள்ளானது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அரசாங்கத்திடம் கேட்பது தமது உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா என்பதற்கான உண்மையான பதிலையே.
அவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களின் மரணத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பன தொடர்பாக நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகால கோரிக்கை.
இதற்குப் பதிலாக காலத்தை நீட்டிக்கும் விசாரணைகள், ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் உருவாக்கப்படுவது குடும்பங்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளது.
ஒரு தலைமுறையைத் தாண்டிய போராட்டம்
வடக்கு – கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று ஒரு தலைமுறையின் வாழ்க்கையைத் தாண்டியுள்ளது.
போராட்டத்தில் நின்ற பல தாய்மார்கள் இறந்துவிட்டனர். அவர்களுடன் சில பதில்களும் புதைக்கப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அந்தப் போராட்டத்தை நிறுத்தவில்லை.
இதனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை கடந்த காலத்தின் ஒரு விவகாரமாக இல்லாமல், இன்றும் தொடரும் மனித உரிமை மற்றும் நீதிக்கான கேள்வியாகவே உள்ளது. நடந்த இனப்படுகொலை சார்ந்து மறைக்கப்பட்ட பக்கங்களின் ஒருமுகம்.
இதனால் இது சர்வதேச விசாரணைப் பொறிமுறை தேவை என்கிற நிலையை உணர்த்துகிறது.
அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள் இதையே மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
நீதிக்காகப் போராடுவது மட்டுமல்ல, போராடிப் போராடியே ஒரு தலைமுறை இறந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பின்னால் நிற்கும் அடுத்த தலைமுறையும் அதே புகைப்படங்களையும் அதே கோரிக்கைகளையும் ஏந்த வேண்டிய நிலை தொடர்கிறது.
இந்த அவலத்தை நினைக்கையில் பேரதிர்ச்சியே எஞ்சுகிறது.
அதனால் ‘நீதிக்கான நீண்ட பயணம்’ என்பது காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக கடந்து வந்த அபாயப் பொறிகள் நிறைந்த பெருந்துயரும் இழப்பும் கண்ணீரும் சுரந்த பாதையின் அடையாளம்.
அந்தப் பயணம் எப்போது முடியும் என்பது இன்னமும் தெரியவில்லை என்பதே பெருந்துயரம். ஆனால் உண்மை வெளிப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதையே வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற அனைத்துலக தின நிகழ்வுகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

