இலங்கையில் மின்சார வாகனங்களுக்கான பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் பொலிஸாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சாரதி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் தொடர்பில் சில பொலிஸ் உத்தியோகத்தர்களிடையே போதிய தெளிவின்மை காணப்படுவதாக சாரதி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெலிவேரிய பகுதியில் தாம் பயணித்த போது, மின்சார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சாரதி, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மின்சார வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் இலக்கத் தகடுகள் வழங்கப்படுவது குறித்து ஆரம்பத்தில் அங்கு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அறிந்திருக்கவில்லை என்றும், அந்த இலக்கத் தகடு சட்டபூர்வமானதா என அவர்கள் கேள்வி எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இலக்கத் தகடு அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில், அதனைப் பெற்றுக்கொண்டமை தொடர்பான குறுஞ்செய்தியை காண்பித்த பின்னரே தம்மால் அங்கிருந்து பயணிக்க முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தாம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், வாகனப் பதிவு மற்றும் புதிய இலக்கத் தகடுகள் தொடர்பான மாற்றங்கள் குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான முறையான தெளிவூட்டல்கள் ஊடாக எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

