கோலாலம்பூர்:
நகைக்கடையில் வாடிக்கையாளரைப் போல நடித்து, RM36,500 மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற நபரை மலேசியக் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்ற 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்தனர்.
பத்துக்குறோவில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், வாடிக்கையாளர் போல நடித்த அந்த நபர் இருமுறை கடைக்கு வந்து ‘ஸ்கெட்ச்’ போட்டுள்ளார். பின்னர் தகுந்த நேரம் பார்த்து, அங்கிருந்த தங்கச் சங்கிலியைக் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்துச் செலாமா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ரம்சி மஹ்முடின் கூறுகையில், “புகார் கிடைத்தவுடன் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு நேற்று அதிகாலை சந்தேக நபரை மடக்கிப் பிடித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி வரை 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
பினாங்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D7) உதவியோடு நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், திருடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் வழக்கு தொடர்பான முக்கியப் பொருட்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் குற்றவியல் சட்டம் பிரிவு 380-இன் கீழ் (கட்டிடத்திற்குள் திருடுதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
The post பட்டப்பகலில் நகைக்கடையில் துணிகரக் கொள்ளை: ஆடவருக்கு நான்கு நாட்கள் தடுப்புக்காவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

