கோலாலம்பூர்:
கோலாலம்பூர் கிராண்ட் ரிவர்வியூ விடுதியில் நடைபெற்று வரும் 72-வது பாஸ் கட்சியின் வருடாந்திர மாநாட்டின் ஒரு பகுதியான பாஸ் இளைஞர் அணி மாநாட்டில், அம்னோ இளைஞரணித் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலே கலந்துகொண்டது நாட்டின் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று (செப்டம்பர் 3) காலை 8.30 மணியளவில், பாஸ் இளைஞர் அணித் தலைவர் அஃப்னான் ஹமீமி தாய்ப் அசாமுடீன் மற்றும் பாஸ் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் ஆகியோருடன் இணைந்து அவர் அரங்கிற்கு வருகை தந்தார்.
நேற்று தொடங்கிய பாஸ் இளைஞர் அணியின் இந்த இருநாள் மாநாட்டின் இன்றைய அதிகாரப்பூர்வத் தொடக்க விழாவில் டாக்டர் அக்மால் சாலே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
அதேவேளையில், 72-வது பாஸ் மாநாட்டின் அங்கமாக இன்றைக்குக் கோலாலம்பூரில் பாஸ் உலமா பேரவை மாநாடும், பாச்சோக்கில் முஸ்லிமாத் மகளிர் பிரிவின் மாநாடும் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



