கோலாலம்பூர்:
பேராக், கோலா கங்சார் அருகேயுள்ள எங்கோர் (Enggor) பகுதியில் புகழ்பெற்ற ‘விக்டோரியா பாலத்தின்’ கீழே 3 வயது சிறுவன் ஒருவன் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் அப்துல் ரஃபி அப்துல் ஹாலிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று மாலை 6.30 மணியளவில் பாலத்திற்குக் கீழே சுமார் 5 மீட்டர் ஆழத்திலுள்ள சாலையில் அச்சிறுவன் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜோகூர், குளுவாங்கைச் சேர்ந்த இக்குடும்பத்தின் 5 குழந்தைகளில் கடைசியாகப் பிறந்த அப்துல் ரஃபி, தனது குடும்பத்தினருடன் கோலா கங்சாருக்குச் சுற்றுலா வந்த இடத்தில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் தனது தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு பாலத்தைக் கடந்து நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென தவறி கீழே விழுந்துள்ளதாக சுங்கை சிப்புட் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் சரண் ஐ வான் தெரிவித்தார்.
பாலத்திற்குக் கீழே விழுந்து கிடந்த சிறுவனைக் கண்ட அவரது தாய் உடனடியாக அவரை மீட்டு கோலா கங்சார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், இரவு 7.40 மணியளவில் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோலா கங்சார் நகராண்மைக் கழகம் விக்டோரியா பாலத்தைச் சுற்றித் தடுப்புப் பட்டைகளை அமைத்து தற்காலிகமாக மூடியுள்ளது.



