அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா பதில் வரிகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிதியுதவித் தொகுப்பையும் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 8 முதல் நடைமுறைக்கு வரும் இந்த பதில் வரிகள், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 வகையான பொருட்களுக்கு 15%, 25% மற்றும் 50% என்ற அளவில் விதிக்கப்படவுள்ளன.
எஃகு(உலோகம்), அலுமினியம், மரத்தாலான பொருட்கள் மற்றும் ஆடைகளுக்கு 50% வரியும், சீஸ், வீட்டு உபகரணங்கள் மற்றும் கடல் உணவுகளுக்கு 25% வரியும், மின்னணுப் பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு 15% வரியும் விதிக்கப்பட்டுள்ளன.
கனடாவின் பதிலடி
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 20 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய இறக்குமதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தன.

Image Credit: Aljazeera
இதற்குக் கனடாவின் பதிலடி நடவடிக்கையாக இந்த பதில் வரிகள் அமைந்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்துவதையும், கனடிய வணிகங்களைப் பாதுகாப்பதையும் இந்த வரிகள் நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
வட்டியில்லா கடன்கள்
அத்துடன், பாதிப்புக்குள்ளாகும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக 7.5 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான உதவித் திட்டத்தையும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

Image Credit: Remitly
இதன் கீழ் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு C$2.5 மில்லியன் முதல் C$5 மில்லியன் வரை 36 மாத கால அவகாசத்துடன் வட்டியில்லா கடன்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

