கோலாலம்பூர்:
உள்ளூர் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகள் எந்தவொரு அழுத்தமும் கட்டுப்பாடும் இன்றித் தங்களது படைப்புகளை உருவாக்குவதற்காக, அரசாங்கம் மேலும் சுதந்திரமான சூழலை உறுதி செய்யும் எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
நாட்டின் திரைப்படத் துறை தொடர்ந்து செழித்து வளர்வதற்கு இந்தச் சுதந்திரம் அவசியமானது என்ற போதிலும், பண்பாட்டு எல்லைகளும் நற்பண்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று இங்கு நடைபெற்ற ‘மேனாரா ஃபினாஸ் டாமான்சாரா’ கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், “கலாச்சார மேம்பாட்டைப் போலவே திரைப்படத் துறையும் அதிக சுதந்திரமான அணுகுமுறையைக் கோருகிறது. அதிகமான தடைகளும் கடுமையான நிபந்தனைகளும் இருக்கும் போது படைப்பாற்றல் சாத்தியப்படாது. திரைப்படத் துறையைப் போட்டியிடும் திறன் கொண்ட துறையாகவும், பார்வையாளர்களைக் கவரும் வகையிலும் மாற்ற விரும்பும் போது, கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால் வளர்ச்சி சாத்தியமில்லை” என்றார்.
திரைப்படத் துறைக்குச் சுதந்திரம் அளிக்கப்படுவதைப் போலவே கலாச்சார மேம்பாடும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் எனத் தொடர்புத்துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளதாகக் கூறிய அன்வார், மலேசியா பொருளாதாரப் பலத்தோடும் கலாச்சார ஆளுமையோடும் உயர்ந்து நிற்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் மக்களின் சுதந்திரமான சூழலுக்கான விருப்பத்தை ஏற்க வேண்டும் என்றும், அதே வேளையில் “நாம் மேலைநாடுகளின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதில்லை; அதே சமயம் கிழக்கத்திய மாதிரி என்பது தீவிர பழமைவாதமாக (Neo-conservative) இருக்க வேண்டியதில்லை. கிழக்கத்திய அணுகுமுறை பண்பாடு, நற்பண்புகள் மற்றும் ஒழுக்க நெறிகளோடு நிலைத்திருக்க வேண்டும், ஆனால் அது அதிக சுதந்திரம் கொண்டதாக இருக்க வேண்டும்” என்றார்.



