டுபாயில் மறைந்திருந்த இலங்கை குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், பஸ் லலித் என்பவரை நாளை (24) நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட காவல்துறை குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
டுபாய் பாதுகாப்புப் படை
டுபாயில் பல இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த காலங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவற்றில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள கொண்ட ரஞ்சி, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள எல்டோ தர்மே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக டுபாய் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், பொரளை வனாதமுல்ல பகுதியில் கடந்த காலத்தில் பல கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள வனாதே சத்து என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறான பின்னணியில், கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ என்ற குற்றவாளி நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளார்.
காவல்துறை மா அதிபரின் மேற்பார்வை
இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை அந்நாட்டு பாதுகாப்புப் படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையில், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர்.
இதேவேளை ஹங்வெல்ல பகுதியில் கப்பம் கோரியமை மற்றும் பல கொலைகளைச் செய்தமை தொடர்பில் இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

