பெற்ற பிள்ளைகளைக் கண்மூடித்தனமாகத் தாக்கிய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மடூல்சீமைப் பொலிஸார் தெரிவித்தனர்.
37 வயதுடைய, எல்டப் டைனாவத்தை பகுதியைச் சேர்ந்த 4 பெண் பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் டைனாவத்தை பகுதியில், நான்கு பெண் பிள்ளைகளின் தாய் ஒருவர் தொடர்ந்தும் தான் பெற்ற பெண் பிள்ளைகள் நால்வரையும் கைகளினாலும் கற்களினாலும் கண்மூடித்தனமாகத் தாக்குவதாகக் கூறி, குறித்த நான்கு பெண் பிள்ளைகளும் நேற்றைய தினம் பசறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது சிறுவர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்ட பசறைப் பொலிஸார், எல்டப் டைனாவத்தை பகுதி மடூல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டது என்பதால் சம்பவம் தொடர்பில் மடூல்சீமைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். உடனே பசறைப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற மடூல்சீமைப் பொலிஸார், குறித்த நான்கு பெண் பிள்ளைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், பிள்ளைகளின் தாயையும் கைது செய்துள்ளனர்.
பிள்ளைகளின் தகப்பன் கொழும்பில் பணிபுரிவதாகவும், குறித்த பெண் பிள்ளைகளைத் தாய் கற்களினாலும் கம்புகளினாலும் கண்மூடித்தனமாகத் தாக்குவதாகவும் சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், 15, 11, 9 மற்றும் 4 வயதுடைய நான்கு பெண் பிள்ளைகளும் தற்போது மடூல்சீமை மெட்டிக்காத்தன்ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நான்கு பெண் பிள்ளைகளும் மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட தாய் இன்றைய தினம் பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மடூல்சீமைப் பொலிஸார் தெரிவித்தனர்.


