Tamilnadu
oi-Vishnupriya R
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியையை கீழே விட்டு அவருடைய 7 சவரன் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (49). இவர் ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

விடுமுறை தினமான நேற்று ஊனமாஞ்சேரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக சென்றிருந்தார். அந்த பணிகளை முடித்துக் கொண்டு மண்ணிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு திரும்புவதற்காக நேற்று மாலை வண்டலூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர், அவரிடம் இருந்த 7 சவரன் தாலி சங்கிலியை பறித்தார். அப்போது அந்த பெண் கூச்சலிட்டு, தாலி சங்கிலியை பிடித்துக் கொண்டு அந்த மர்ம நபருடன் போராடினார்.
ஆனால் அந்த நபரோ செல்வியின் ஜாக்கெட்டை தோள் பட்டை பகுதியில் லேசாக கிழித்துவிட்டு தாலி சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டார். அப்போது பதறி துடித்த செல்வி, “காப்பாற்றுங்க, காப்பாற்றுங்க, தாலி செயினை பறிச்சிட்டு ஓடுறான்” என கூச்சலிட்டுள்ளார்.
அவரது அலறல் சப்தத்தை கேட்டு அங்கு வந்த சிலர் அவரை ஆசுவாசப்படுத்தி ஓட்டேரி போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்த தாலி சங்கிலியில் 2 சவரன் மதிப்புள்ள தாலி மட்டும் பொதுமக்கள் மீட்டு அந்த பெண்ணிடம் அளித்துவிட்டனர். மீதமுள்ள 5 சவரன் நகையுடன் அந்த மர்ம நபர் தண்டவாளத்தில் குதித்து தப்பி விட்டாராம்.
இதையடுத்து செல்வியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் நடந்தவற்றையும் எந்த பக்கம் தப்பி ஓடினார் என்பதையும் தெரிவித்தாராம். இதையடுத்து போலீஸார் அவ்வழியாக உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
போலீஸாரும் இது போல் தனியாக செல்லும் பெண்கள் தங்களது சேலை அல்லது துப்பட்டாவில் கழுத்தை மூடிக் கொண்டு செல்வது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர். பட்ட பகலில் ஆள்நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஆசிரியையின் தாலி சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


