கோலாலம்பூர்: இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மோசடி அழைப்பு மையத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்ட மலேசியர் ஒருவர் சமீபத்தில் விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் கும்பலுடன் 32 வயதான அந்த நபருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது என புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.
“அவர் விடுவிக்கப்பட்டு மலேசியாவுக்குத் திரும்பியுள்ளார்,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார். மேலும், வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை அவரிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இணையவழி மோசடிக் கும்பலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்த தகவல்களை விசாரிக்க, பாகிஸ்தானுக்கு ஒரு சிறப்புக்குழு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை ஆய்வாளர் காலித் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அந்த மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது தடுத்து வைக்கப்பட்ட 258 வெளிநாட்டினரில் வேறு எந்த மலேசியரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.



