International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானம் ரத்தான போது இந்தியா மற்றும் அமெரிக்கா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நான் உள்படபாகிஸ்தானியர்களுக்கு ஹோட்டலில் அறை வழங்க மறுத்துவிட்டனர்” என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் எம்பி ஆசாத் கைசர் புலம்பி தள்ளிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர். இவர் கடந்த 2018 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்தவர். இவர் தற்போது எம்பியாக உள்ளார்.
இந்நிலையில் தான் ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானை மதிப்பதே இல்லை. இந்தியா, அமெரிக்காவுக்கு தான் முதல் மரியாதை கொடுக்கிறது என்று நாடாளுமன்றத்தில் புலம்பி தள்ளி உள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் எம்பி ஆசாத் கைசர் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கூறியதாவது: ”ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான் பயணம் செய்தேன். அங்கு அவர்கள் பாகிஸ்தானியர்களை நடத்திய விதம் வித்தியாசமாக இருந்தது. என்னுடைய விமானம் ரத்து செய்யப்பட்டது.
அப்போது ஹோட்டலில் தங்க வாய்ப்பு கேட்டோம். ஆனால் அங்குள்ளவர்கள் இந்தியா, அமெரிக்காவின் விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஹோட்டலில் அறை வழங்கினர். இதுதொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு ஹோட்டலில் அறை ஒதுக்கப்படவில்லை.
பாகிஸ்தானும், ஐக்கிய அரபு அமீரகமும் நல்ல உறவில் உள்ளன. சகோதரத்துவ இஸ்லாமிய நாடாக உள்ளன. அமெரிக்கா – ஈரான் போரில் பாகிஸ்தான் தான் மத்தியஸ்தம் செய்தது. இப்படி இருக்கும்போது ஐக்கிய அரபு அமீரகம் நான் உள்பட நம் நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஹோட்டல் வழங்காதது கண்டிக்கத்தக்து.
இந்த விவகாரம் பற்றி தூதரகம் அளவில் பேச வேண்டும். பாகிஸ்தான் மக்கள் ஐக்கிய அரபு அமீரகம் மீது நல்ல நம்பிக்கையை வைத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது அந்த நம்பிக்கை சீர்க்குலைய வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்று புலம்பினார்.

