மலை மலையாய் பணத்தை வைத்திருக்கும் IT நிறுவனங்கள்.. இப்போ கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.. ஏன்..?!
இந்திய ஐடி நிறுவனங்கள் என்றாலே அதிகளவிலான பண கையிருப்பு, குறைந்த கடன் நிலுவை, வலுவான நிதி நிலை என்பது தான் இதுவரை இருந்த பிம்பம். ஆனால் இப்போது அந்த கதை மெல்ல மாறத் தொடங்கியுள்ளது. AI தொழில்நுட்பத்தின் மூலம் மொத்த வர்த்தக சந்தையும் மாற இருப்பதால் பெரிய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய வர்த்தகத்தையும், வருமானத்தையும் இழக்க உள்ளது.
இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் என்னவென்றால் முதல் விஷயம் ஏஐ சேவை அளிக்கும் திறனை உடனடியாக ஐடி நிறுவனங்கள் மேம்படுத்த வேண்டும். 2வது விஷயம் காலம் காலமாக அளித்து வரும் சேவையில் இருந்து வரும் வருமானத்தை ஏஐ மூலம் இழக்க நேரிடுவதால் மாற்று சேவைகளை வழங்கி அதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.

CLSA நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூட 2030க்குள் இந்திய ஐடி நிறுவனங்களின் வருமானம் பெரிய அளவில் குறைய உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு ஏஐ, கிளவுட் போன்ற புதிய தொழில்நுட்ப பிரிவில் திறன் மிக்க நிறுவனங்களையும், இதில் சிறப்பான Order Book கொண்ட நிறுவனங்களை வாங்குவது மூலம் வருவாய், வர்த்தக இழப்பை ஈடு செய்வது மட்டும் அல்லாமல் ஏஐ மூலம் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பித்து அடுத்த தலைமுறை சேவைகளை வழங்கும் திறனை பெற முடியும்.
இதற்காக நிறுவனங்களை கைப்பற்றவும், நிறுவனங்களின் பங்குகளை வாங்கவும் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் கையிருப்பில் இருக்கும் பணத்தை தாண்டி கடன் வாங்க துவங்கியுள்ளது. Persistent Systems, Coforge, Cognizant போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இப்பணிகளை துவங்கி பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளதால் மற்ற நிறுவனங்களும் இதை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
பல ஆண்டுகளாக இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் இருப்பது legacy தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் தான். அதாவது, நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள். ஆனால் AI வந்த பிறகு இந்தச் சூழல் வேகமாக மாறுகிறது.
பாரம்பரிய ஐடி சேவைகளில் வாடிக்கையாளர்களின் செலவுகள் மற்றும் பணியின் அளவு மாறுவதால், நிறுவனங்கள் புதிய AI திறன்கள், தொழில்நுட்பங்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகளை வேகமாகப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இதற்காக ஒரு நிறுவனத்தை புதிதாக உருவாக்கி வளர்ப்பதைவிட, ஏற்கனவே அந்தத் துறையில் இருக்கும் நிறுவனத்தை வாங்குவது வேகமான வழியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் Persistent Systems நிறுவனம் ஜெர்மனி நாட்டின் டேட்டா இன்ஜினியரிங் நிறுவனமான Nagarro-வை 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது.
இதேபோல் Coforge சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் Encora என்னும் நிறுவனத்தை சுமார் 2.35 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதேபோல் Cognizant நிறுவனம், Belcan நிறுவனத்தை சுமார் 1.3 பில்லியன் டாலருக்கு கைப்பற்ற கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

