வெறும் 3 ரூபாய்க்கு பாத்திரம் கழுவிய சிறுவன்.. இன்று ரூ.160 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு ஓனர்!
ஒரு காலத்தில் வெறும் 3 ரூபாய் சம்பளத்திற்கு பாத்திரம் கழுவச் சென்ற இளைஞர் இன்று ரூ.160 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர் சிறுவயதில் பார்த்த வேலைக்கும் இன்று அவர் எட்டியிருக்கும் உயரத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. தொடர்ந்து தன்னுடைய விடா முயற்சியால் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார். யார் அந்த நபர்? எப்படி இவ்வளவு பெரிய நிறுவனத்தை உருவாக்கினார்? என்ற விவரங்களை பார்ப்போம்.
ராஜஸ்தான் மாநிலம் பிசாவ் கிராமத்தில் 1978-ஆம் ஆண்டு பிறந்தவர் விஜய் வர்மா. இவர் பிறந்ததிலிருந்து வறுமையை சந்திக்காத நாளில்லை. அவருடைய குடும்பம் தொடர்ந்து வறுமையில் வாடிக் கொண்டிருந்தது. இவருக்கு 10 வயதாகும் போதே அவருடைய தாத்தா பாட்டியை இழந்தார்.

அதிலிருந்து ஓராண்டு முடிவதற்குள் விஜய் வர்மாவின் தந்தையும் காலமானார். வர்மாவையும் சேர்த்து அவருடைய பெற்றோருக்கு 6 குழந்தைகள். அவருடைய தந்தையை இழந்த பிறகு வர்மாவின் தாய் தனியாக 5 குழந்தைகளையும் வளர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இவர்களுடைய குடும்பம் கிராமத்தில் இருந்ததால் பெரிதாக வேலை வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
வர்மாவின் தாய் அருகில் இருக்கும் காட்டிற்கு சென்று விறகு பொறுக்குவது, காய்ந்த இலைகளை சேகரிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து மளிகை பொருட்கள் வாங்கி குழந்தைகளை வளர்த்து வந்தார்.
1989-ஆம் ஆண்டு வர்மாவின் மூத்த சகோதரர் அரசு மருத்துவமனையில் மதிய உணவு வழங்கும் வேலையில் சேர்ந்தார். அதற்கு அவருக்கு ஒரு நாளைய கூலியாக 2 ரூபாய் கிடைத்தது. இப்படியே சிறுக சிறுக பணம் தனது மூத்த பிள்ளை கொடுத்த பணத்தில் அவருடைய தாயார் காய்கறி, பால், பழம் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார்.
வர்மா ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் கைதேர்ந்தவராக இருந்தார். அப்போது அவருடைய மூத்த சகோதரருக்கு மாதம் 500 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. சகோதரருடன் வேலைக்கு செல்ல வர்மா முடிவு செய்தார். ஆனால் அவருடைய தாய் படிப்பை நிறுத்த வேண்டாம் என்று எவ்வளவோ கூறியும் வர்மா அதை கேட்கவில்லை. தனது மூத்த சகோதரருடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு மும்பைக்கு புறப்பட்டார்.
அப்போது அவர் பாத்திரம் கழுவுவது, மணல் சலிப்பது என அன்றாட கூலி வேலைகளை செய்து குடும்பத்திற்கு உதவி வந்தார். பாத்திரம் கழுவினால் ஒரு நாளைக்கு 3 ரூபாய் கிடைக்கும், மணல் சலித்தால் ஒரு நாளைக்கு 8 ரூபாய் கிடைக்கும். இப்படி தனக்கு கிடைத்த கூலியை கொண்டு தனது தாய்க்கு உதவி வந்தார். அங்கு அவர் பார்த்த வேலை கட்டுமான தொழில் பற்றிய நிறைய விஷயங்களை கற்றுத் தந்தது. இப்படியே ஆண்டுகள் உருண்டோடியது.
வர்மா 2008-ஆம் ஆண்டு சாய் விஜய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகு 2011-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை அதிகாரபூர்வமாக ரெஜிஸ்டர் செய்தார். இவருக்கு கிடைத்த ஒரே ஒரு ஆர்டர் அவருடைய வாழ்க்கையை மாற்றியது. திடீரென ஓமன் மற்றும் ஏமன் நாடுகளில் இருந்து ரூ.730 கோடி மதிப்பிலான காண்ட்ராக்ட் கிடைத்தது.
அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த வெளிநாட்டு காண்ட்ராக்ட் மூலம் தொடர்ந்து அந்நிறுவனம் வளரத் தொடங்கியது. இதனால் 3800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளார். இவரிடம் கற்றுக்கொண்ட 3200-க்கும் மேற்பட்டோர் இப்போது சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர்.
