கோலாலம்பூர்:
4 மாதக் குழந்தைக்குப் பாலூட்டி வரும் 27 வயது தாய் ஒருவர், போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகத் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு முகமையால் (AADK) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்கை பட்டாணியில் உள்ள வீடு ஒன்றில் போதைப்பொருள் உட்கொண்டிருந்த போது, இவரோடு சேர்த்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். கோலா மூடா AADK நடத்திய சிறப்புச் சோதனையில் கைது செய்யப்பட்ட 35 நபர்களில் இவரும் ஒருவர் என்று, கோலா மூடா மாவட்ட AADK தலைவர் அஸ்னிடா இஷாக் தெரிவித்தார்.
பழைய இரும்புப் பொருட்களைச் சேகரித்து ஜீவனம் நடத்தி வரும் இந்த இளம் தாய், கடந்த ஜூன் மாதம் 8 மாதக் கர்ப்பிணியாக இருந்தபோதும் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டவர்.
பிணை விதிகளுக்குக் கீழ்ப்படியாமலும் நீதிமன்ற ஆஜராகத் தவறியதாலும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். சிறுநீர் பரிசோதனையில் அவர் மெத்தம்பேட்டமின் (Methamphetamine) போதைப்பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரை கிளந்தானில் உள்ள பாச்சோக் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அனுமதித்துச் சிகிச்சை அளிக்க மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளம்தாய் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படும் நிலையில், அவரது 4 மாதக் குழந்தையைப் பராமரிக்க அவரது 55 வயது தாயார் (குழந்தையின் பாட்டி) முன்வந்தார் என்றும், இருப்பினும், அந்தப் பாட்டி சமீபத்தில்தான் சிறையிலிருந்து விடுதலையானவர் என்பதும், அவர் மீது 14 போதைப்பொருள் குற்றப் பின்னணிகள் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரும் அவரது 40 வயது ஆண் நண்பரும் பரிசோதிக்கப்பட்டதில், இருவருமே மெத்தம்பேட்டமின் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதால் குழந்தையைப் பராமரிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அந்தப் பெண்ணிற்கு 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளான். அப்பையனைப் பராமரித்து வந்த காப்பாளரின் கணவரும் AADK-வால் கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளி என்பதால், குழந்தைகள் இருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சமூக நலத்துறை (JKM) அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



