International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசியல் மற்றும் நிர்வாக பவர் யாருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு மிக பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் ராணுவ அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வரும் சூழலில், விரைவில் அங்கு ராணுவ ஆட்சி அமைவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிய தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அந்நாட்டு அரசுக்கு உதவவே சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. அந்த சீர்திருத்தங்களை செய்தால் தான் உதவுவோம் என நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பாகிஸ்தானில் நிலைமை மோசமாக இருந்தது.

பாகிஸ்தான்
இவ்வளவு மோசமான சூழலிலும் கூட பாகிஸ்தானில் ராணுவத்தின் அதிகாரம் மேலோங்கி வருகிறது. அங்கு பீல்ட் மார்ஷலாக இருக்கும் முனீர் எப்படியாவது அதிகாரத்தை நேரடியாக அடைய வேண்டும் என துடித்து வருகிறார். இதற்கிடையே அந்நாட்டின் ராணுவம், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறதாம். அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதில் ராணுவத்திற்கு அதிகாரப்பூர்வமான பங்கு வழங்கப்படுமாம். மேலும், வெறுமன கருத்து சொல்வது என மட்டும் இல்லாமல் தீவிர ஆலோசனையிலும் பங்கேற்கும் அளவுக்கு ராணுவத்திற்கு அதிகாரம் கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரம்
பாதுகாப்பு துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை கூறியுள்ளார். இந்த திட்டம் பொருளாதார சீர்திருத்தங்களை மட்டுமின்றி அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்களையும் கொண்டு வரலாம். இதில் முக்கிய மாற்றமே ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவது தான். நாட்டின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பாகிஸ்தான் ராணுவத்தை தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். பாகிஸ்தானில் ராணுவம் ஏற்கனவே அரசியல் மற்றும் வெளியுறவு கொள்கையில் மறைமுகமாக பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த திட்டம் வந்தால் இனி நேரடியாகவே முடிவு எடுக்கும்.
அதேநேரம் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியே இருந்தது இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. கடந்த காலங்களில் பல முறை பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சி செய்துள்ளது. சுமார் 34 ஆண்டுகள் வரை பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்துள்ளது. கடைசியாக 2008ல் ராணுவ ஆட்சி முடிந்த நிலையில், மீண்டும் ராணுவ ஆட்சியை நோக்கியே பாகிஸ்தான் நகர்வது போல தெரிகிறது.
பாகிஸ்தான் ராணுவம்
தற்போது பரிசீலிக்கப்படும் இந்த திட்டம், ராணுவத்தின் செல்வாக்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ் அதிகாரப்பூர்வமாக கொண்டு வரும். அதாவது முக்கிய முடிவுகளை பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து ராணுவமும் இணைந்து எடுக்கும். அதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் தரப்படுவதால் யாரும் இது குறித்து கேள்வியும் எழுப்ப முடியாது.
மேலும், பாகிஸ்தானில் இப்போது இந்தியாவை போலவே நாடாளுமன்ற ஆட்சி முறை உள்ளது. இதை மாற்றி அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளை போல, அதிபர் முறைக்கு மாற போகிறார்களாம். அதிபர் முறை என்றால் ஒற்றை நபருக்கே அதிகாரம் குவிந்து கிடக்கும். இருப்பினும், அதிபர் முறையில் விரைவான முடிவுகளை எடுக்கவும், கொள்கையை சீராக வைத்திருக்க முடியும் என பாகிஸ்தான் கருதுகிறது.
ராணுவ ஆட்சி
இந்த அதிபர் முறையும் சரி, ராணுவத்திற்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் சட்டமும் சரி, பாகிஸ்தான் நேரடியாக ராணுவ ஆட்சியை நோக்கியே செல்கிறது. பொருளாதார நெருக்கடி, அதிக கடன், அரசியல் மோதல்கள் என பாகிஸ்தான் ஏற்கனவே படாதபாடு பட்டு வரும் நிலையில், இது நேரடியாக ராணுவத்தின் கைகளுக்கு ஆட்சியை தாரைவார்ப்பதற்கு சமம் என்றே சர்வதேச வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.




