கைது செய்யப்பட்டுள்ள நான்கு தனியார் வங்கி முகாமையாளர்கள், 89 வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 10,151 சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாகப் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
2026 ஜனவரி மாதம் சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விடயங்களைத் தெரிவித்து, 210 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விசாரணைகளின் அடிப்படையில், கடந்த 19ஆம் திகதி நீர்கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்கு வெளியே அனுப்பியதாகக் கூறப்படும் மொத்தப் பணத்தின் பெறுமதி ரூ.74 பில்லியன் என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் நீதிமன்றத்தில் விடயங்கள் அறிக்கையிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

