India
oi-Hema Vandhana
டிஸ்பூர்: அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இனிமேல் முறையாக விவாகரத்து பெறாமல் முதல் மனைவியை பிரிந்துவிட்டு, இன்னொரு பெண்ணுடன் வாழும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20 சதவீதத்தைப் பிடித்தம் செய்து முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் விவரத்தை பார்ப்போம்.
சமூகத்தில் பலதார மணத்தை தடுப்பதற்காக அசாம் அரசு ஏற்கனவே பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பணியில் உள்ள சிலர் தங்களின் முதல் மனைவியை சட்டப்படி பிரியாமலேயே வேறு திருமணம் செய்துகொண்டு கைவிடும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்தன.

மனைவியின் வங்கி கணக்கில் பணம்
இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்ற வாசல்களில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்றவும், பெண்களுக்கு உடனடி நிதிப் பாதுகாப்பை வழங்கவுமே இந்த அதிரடித் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி, பாதிக்கப்பட்ட முதல் மனைவி அரசுக்கு முறையான விண்ணப்பம் அளித்தால் போதும். எந்தவிதமான தாமதமும் இல்லாமல் சம்பந்தப்பட்ட ஊழியரின் மாத சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் நேரடியாகப் பிடித்தம் செய்யப்பட்டு, முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்த சம்பளப் பிடித்தமானது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் கால கட்டத்திலும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இடைக்கால வாழ்வாதாரம் உறுதியாகிறது.
அரசு ஊழியர்கள் 2வது மனைவி
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இது குறித்து சொல்லும்போது, அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும், குடும்பக் கடமைகளில் இருந்து விலகிச் செல்வோரை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.. சேவை விதிகளுக்கு புறம்பாக செயல்படும் ஊழியர்கள் மீது துறைரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாடம் கற்பித்த அசாம் அரசு
அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கும் இத்தகைய பாதுகாப்பை விரிவுபடுத்த மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்டத்திருத்தங்கள் விரைவில் கொண்டுவரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்ப பொறுப்புகளை தட்டிக்கழித்துவிட்டு செல்லும் நபர்களுக்கு சட்டத்தின் மூலம் பாடம் கற்பிக்கும் இந்த செயல், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.. அசாம் மாநிலத்தில் குடும்ப உறவுகளைப் பேணிக் காக்கவும், சட்டவிரோத திருமணங்களை கட்டுப்படுத்தவும் அம்மாநில அரசு இப்படியொரு புதிய நடைமுறையை அறிவித்துள்ளது பலரது கவனத்தை பெற்று வருகிறது..!!!


