தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து இனிவரும் தேர்தல்களில் இணைந்து பயணிக்கப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற பிரமாண்ட மாநாட்டில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் பலத்த கரகோஷத்திற்கு இடையே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்
மாநாட்டில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன், “இன்றைக்கு ஆளுகிற முதலமைச்சர் அன்பு சகோதரர் ஜோசப் விஜய் அவர்களோடு நாம் கூட்டணி வைத்திருக்கிறோம்.
விசிகவும் தவெகவும் இனி இந்த அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்” என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இத்தனை ஆண்டுகாலம் ஆளுங்கட்சிகளோடு நாம் கூட்டணி வைத்தோம். இனி நாம் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என திருமாவளவன் பேசினார்.
திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் பரபரப்பு
விசிக-தவெக கூட்டணியின் இந்த திடீர் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இரு முக்கியக் கட்சிகளின் கரங்கள் கோர்க்கப்பட்டுள்ள நிலையில், வரவிருக்கும் தேர்தல் களத்தில் இது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

