50 ரூபாய் சம்பளத்தில் டீ பரிமாறியவர்.. இன்று இந்திய சினிமாவின் ராவணன்.. பிரமிக்க வைக்கும் யாஷ்..
இந்திய திரையுலகில் இன்று பான்-இந்தியா ஸ்டாராக ஜொலிக்கிறார் நடிகர் யாஷ். இவரது வெற்றி பயணம் பலருக்கும் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். வெறும் 300 ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறி, மேடை நாடகங்களில் டீ பரிமாறி, தினசரி 50 ரூபாய் சம்பாதித்த ஒரு சாதாரண இளைஞன், இன்று இந்திய சினிமாவின் பிரம்மாண்ட நாயகனாக உருவெடுத்துள்ளார்.
யாஷின் உண்மையான பெயர் நவீன் குமார் கவுடா . கர்நாடக மாநிலம் ஹாசன் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு பேருந்து நடத்துநர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது 16ஆவது வயதில் வெறும் 300 ரூபாயை மட்டும் வைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாராம் யாஷ்.

பெங்களூரு வந்தடைந்த யாஷ், பி.வி. காரந்த் பெனகா நாடக குழுவில் இணைந்தார். நாடக மேடைக்கு பின்னால் வேலை பார்த்த யாஷ், கலைஞர்களுக்கு டீ பரிமாறுவது, சுத்தம் செய்வது போன்ற சிறிய வேலைகளை செய்து வந்தார். இதற்காக அவருக்கு தினசரி 50 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் தனது நடிப்பை தொடர்ந்த யாஷ், 2004இல் உத்தராயணா மற்றும் 2005இல் நந்த கோகுலா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கிய அவர், ‘மொடலசலா’, ‘கிராதகா’, ‘கோகுலா’, ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமச்சாரி’ போன்ற பல வெற்றி படங்களில் நடித்து கன்னட திரையுலகின் முன்னணி நாயகனாக உயர்ந்தார்.
2018 தான் யாஷின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, K.G.F: Chapter 1 திரைப்படம். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து கன்னட சினிமாவை தேசிய அளவில் கொண்டு சேர்த்தது. பான் இந்தியா ஸ்டாராக யாஷை மாற்றியது. இதனை தொடர்ந்து 2022இல் வெளியான K.G.F: Chapter 2 திரைப்படம் உலகளவில் 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது.
ராக்கி பாயாக உலகம் முழுவதும் புகழ்பெற்றார், இப்போது யாஷின் படங்களுக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர். 4,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் யாஷ் களமிறங்கியுள்ளார்.
அதே போல டாக்ஸிக் (Toxic) படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாகவுள்ளது. இவர் ஒரு படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவதாக சொல்லப்படுகிறது.
ஒருகாலத்தில் தினசரி 50 ரூபாய்க்கு டீ பரிமாறியவர் இன்று பல ஆயிரம் கோடி மதிப்புள்ள படங்களை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இந்திய சினிமாவின் மிக விலையுயர்ந்த மற்றும் பிரம்மாண்டமான பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் திரைப்படங்களை தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்து பல இளைஞர்களுக்கும் முன் உதாரணமாக மாறியுள்ளார்.
