புதுடெல்லி: உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதமாக உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 30 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மனீஷ் ஷா தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தினமும் 23.5 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகின் மொத்த பால் உற்பத்தியில் 24 சதவீதம் ஆகும். இந்நிலையில், இதை 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக மனீஷ் ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து மனீஷ் ஷா கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது உலகின் மொத்த பால் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை இந்தியா வழங்குகிறது. 2030-ம் ஆண்டுக்குள் இதை மூன்றில் ஒரு பங்காக மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைய நம் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது அவசியம்.
உலக அளவில் மிகப் பெரியபால் உற்பத்தி நாடாக இந்தியா இருந்தாலும், இந்திய கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன்வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் சற்று பின்தங்கியுள்ளது. இதை மேம்படுத்த, மத்திய அரசும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.