முடங்கிய நாடாளுமன்றம் .. ஒவ்வொரு நாளும் மக்களின் எத்தனை கோடி வரிப்பணம் வீண் தெரியுமா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் நடந்து முடிந்திருக்கிறது. அமளி, கூச்சல், குழப்பம், போராட்டம் , ஒத்திவைப்பு என இந்த மழைக்கால கூட்ட தொடர் முழுவதுமே பெரிய அமளியாக தான் காட்சி தந்தது. அந்த வகையில் மிக மோசமான ஒரு கூட்டத்தொடராக இந்த கூட்டத்தொடர் அமைந்துவிட்டது.
மழைக்கால கூட்டத்தொடர் முழுவதுமே எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி மற்றும் போராட்டங்களால் அவை நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதியான இன்றுடன் முடிந்துவிட்டது. இந்த கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதாவது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மொத்தம் 7,023 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் ஒரு நிமிட செயல்பாட்டு செலவு சுமார் 2.5 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கீட்டின்படி, 7,023 நிமிடங்கள் முடங்கியதன் விளைவாக மக்களின் வரிப்பணத்தில் சுமார் 175 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்பிக்கள் வருகை அவர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றுக்கு பெரும் செலவு செய்யப்படுகிறது. மக்கள் வரிப்பணத்தில் செய்யப்பட்ட இந்த செலவுகள் வீணாகிவிட்டன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், இளைஞர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை தொடங்கிய உடனேயே ஒத்திவைக்கப்படும். மீண்டும் அவை கூடினாலும் உடனே ஒத்திவைக்கப்படும். இதனால் பல நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
அவையில் கடும் குழப்பம் நிலவிய சூழலிலும், இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 20 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல மசோதாக்கள் போதிய விவாதங்கள் ஏதுமின்றி அவசரகதியில் நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றம் சரிவர இயங்காததால் முக்கியமான பல பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் போனதுடன், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய அங்கமான ஆக்கப்பூர்வமான விவாதங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என பாஜக தரப்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும் போதும் எதிர்க்கட்சிகலுக்கு ஏதேனும் ஒரு பிரச்சினை கைக்கு வந்துவிடுகிறது. அந்தவகையில் இந்த முறை நீட் தேர்வு விவகாரம் முன்னிலை வகித்தது. மக்களவையில் புரொடெக்டிவிட்டி 19%ஆகவும் மாநிலங்களவையில் 39%ஆகவும் குறைந்துவிட்டது. ஆனால் மக்கள் பிரச்சினைகளை பேச வாய்ப்பு தர வேண்டும் என்றுதானே அமளியில் ஈடுபடுகிறோம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்த அமளிக்கு மத்தியிலும் அரசு பொதுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் மசோதா, யுபிஐ பரிவர்த்தனைகளில் எம்டிஆர் கட்டணங்களை விதிக்கும் மசோதா, கேரளம் பெயர் மாற்ற மசோதா உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றியது. 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை கோரிய தனிநபர் மசோதா போன்ற பல முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு கூட எடுக்கப்படவில்லை.

