சிரம்பான்:
போர்ட்டிக்சன், சுங்கை மெனியாலாவில் உள்ள துப்பாக்கிச் சூடு பயிற்சி மைதானத்தில், சக வீரரால் தவறுதலாகச் சுடப்பட்டதில் இராணுவ வீரர் ஒருவர் முகத்தில் காயமடைந்தார்.
நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 12) பிற்பகல் 2:15 மணியளவில், 20 வயதுடைய பாதிக்கப்பட்ட வீரரும் அவரது சக வீரர்களும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நெகிரி செம்பிலான் துணைப் போலீஸ் கமிஷனர் முகமட் நஷாருடின் முகமட் ஷரீஃப் தெரிவித்துள்ளார்.
முகத்தில் காயமடைந்த 20 வயதுடைய இராணுவ வீரர், உடனடியாக போர்ட்டிக்சன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது நிலைமை சீராக உள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் 20 வயதுடைய மற்றொரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1960-ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் பிரிவு 37 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 337 (பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



