விஜய்: ஒரே நாளில் 97 ஒப்பந்தம்.. ரூ.67000 கோடிக்கு டார்கெட்.. கீர்த்தனா கொடுத்த வாக்குறுதி..!
விஜய் தலைமையிலான அரசு அமைந்து சுமார் 3 மாதங்கள் முழுமையாக முடிந்ததையொட்டி முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இன்று காலை 11 மணிக்கு சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு துவங்க உள்ளது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் விஜய் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா முன்னிலையில் சுமார் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சுமார் 67,452 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை இந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பெற உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த முதலீடுகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பல நிறுவனங்கள் முதல் முறையில் தமிழ்நாட்டை தேர்வு செய்து முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது, ஏற்கனவே அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைகளை அழைத்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாடு கட்டாயம் தொழிற்துறையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, முந்தைய ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல உண்மையான முதலீடாக மாறப்படவில்லை. ஆனால் விஜய் தலைமையிலான அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை 100 சதவீதம் முதலீடாக மாற்றுவோம் என வாக்குறுதியை அமைச்சர் கீர்த்தனா கோயம்புத்தூரில் நடந்த சிஐஐ கூட்டத்தில் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் உண்மையான முதலீடாக களத்திற்கு வருமா, அதை தவெக அரசு சாதித்து காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த ஆட்சி காலத்தில் சுமார் 1179 ஒப்பந்தங்கள் செய்துள்ளது, இதில் 73.53 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறியுள்ளது, இந்திய அளவில் ஒப்பிடும் போது இது அதிகப்படியான கன்வெர்சன் ரேட் ஆக உள்ளது.
ஆனால் அமைச்சர் கீர்த்தனா முந்தைய திமுக அரசு செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சுமார் 25 சதவீத ஒப்பந்தங்கள் உண்மையான முதலீடாக மாறவில்லை என்பதை முக்கியமானதாக முன்வைக்கிறார்.
இந்தியாவில் பல மாநிலங்கள் பல லட்சம் கோடி முதலீடுகள் பெறுவதாக தங்களுடைய முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும், இது செய்திகளிலும் மிகப்பெரியதாக இடம்பெறும். ஆனால் இது உண்மையான முதலீடாக மாறும் அளவீடு என்பது வெறும் 25 – 50 சதவீதமாக மட்டுமே இருக்கும்.
ஆனால் இந்த அளவீட்டை உடைத்து ஸ்டாலின் தலைமையிலான முந்தைய தமிழ்நாடு அரசு 73 சதவீதம் வெற்றி அளவை கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கீர்த்தானவின் 100 சதவீத சக்சஸ் ரேட் அளவீடு என்பதை எப்படி எட்டப்படுகிறது என்பதை காத்திருத்து பார்க்க வேண்டும்.

