
செங்கடலின் பாப் எல்-மன்டெப் நீரிணைப் பகுதியில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதிகள் நடத்திய தாக்குதலில், சிறிய சரக்குக் கப்பல் ஒன்றின் 4 மாலுமிகள் இன்று உயிரிழந்ததாக யேமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், பாகிஸ்தான் கடற்பகுதியில் மற்றொரு சரக்குக் கப்பல் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
எகிப்திய நிறுவனத்திற்குச் சொந்தமான திஹாமா என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த மூவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கப்பல் மாலுமிகளின் கட்டுப்பாட்டை இழந்தது.
மாலுமிகளைக் காப்பாற்ற முயன்ற யேமன் கடலோரக் காவல் படையினர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில், 3 வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் யேமனின் பெரிம் தீவுக்கு வடகிழக்கே கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் கடற்பகுதியில் ஏவுகணைத் தாக்குதல்: இதற்கிடையில், ஓமான் வளைகுடாவில் பாகிஸ்தான் கடற்பகுதியைக் கடந்து சென்ற பனாமா நாட்டின் கொடியுடன் கூடிய வேலா நோவா என்ற கொள்கலன் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் ஈரான் தொடர்புடைய கப்பல் போக்குவரத்திற்கு ஐ. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை மீறித் தப்ப முயன்றதால் அமெரிக்க ஹெலிகொப்டர் ஹெல்ஃபயர் ஏவுகணையை வீசி அக்கப்பலின் சுக்கானை தாக்கியதாக வோல்ஸ்ஸ்றீட் ஜேர்னல் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

