இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டது. அது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும்.
சில தரப்பினரிடமிருந்து வந்த யோசனை
இப்பிரச்சினையின் தீவிரத்தன்மை குறித்து கலந்துரையாடும் போது சில தரப்பினரிடமிருந்து வந்த ஒரு யோசனையே இது. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து இதுவரை இறுதி முடிவோ அல்லது உடன்பாடோ எட்டப்படவில்லை.

பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் குறித்து பேசப்படும் போது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் ஒரு யோசனை மட்டுமே இது.” என தெரிவித்தார்.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று (10) கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

