International
oi-Velmurugan P
வாஷிங்டன்: இந்தியாவில் ஐஐடியில் பட்டம் பெற்ற பட்டதாரி ஒருவர் ரூ.13 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டு இந்தியாவில் வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று செயற்கை நுண்ணறிவு ( ஏஐ) படிப்பை முடித்தார். அந்த படிப்பில் பெற்ற கூடுதல் நிபுணத்துவத்தும் காரணமாக தற்போது ரூ.1.5 கோடி சம்பளத்தில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சாய் வெங்கட ஆதித்யா அரேபல்லி என்பவர் 2022ம் ஆண்டில் ஐஐடி தார்வாடில் கணினி அறிவியல் துறையில் பி.டெக் பட்டப்படிப்பு முடித்தார். அந்த இளைஞர் படிப்பை முடித்த கையோடு பெங்களூரில் உள்ள ‘ரிவர்பெட் டெக்னாலஜி’ என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.13 லட்சம் சம்பளத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். அங்கு தீவிரமாக வேலையை செய்து கொண்டிருந்த அவருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பமான ஏஐ படிப்பை படிக்கலாம் என்ற ஆசை இருந்தது.

அமெரிக்காவில் ஏஐ மேல்படிப்பு
ஏனெனில் இன்றைய சூழலில் தொழிலும் தொழில்நுட்பத் துறையும் செயற்கை நுண்ணறிவு நோக்கி வேகமாக மாறி வருகிறது. கால ஓட்டத்தில் காணாமல் போகக்கூடாது என்றால் ஏஐ தொழில்நுட்பத்தை கற்று தெளிய வேண்டும் என்று விரும்பினார் ஆதித்யா. இதற்காக 13 லட்சம் சம்பள வேலையையை ராஜினாமா செய்தார். அத்துடன் 2023 ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்குச் சென்றார்.அங்கு ‘யூனிவர்சிட்டி அட் பஃபலோவில்’ செயற்கை நுண்ணறிவில் எம்.எஸ் (MS in AI) மேற்படிப்பில் சேர்ந்தார்.
1.5 கோடி சம்பளம்
2023 முதல் 2025 பிப்ரவரி வரை சுமார் 18 மாதங்கள் படித்த அவர், படிப்போடு சேர்த்து சான்றிதழ்கள் பெறுவது, கோடிங் மற்றும் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். தொடர்ந்து மேல்படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன், 2025 மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் சீயாட்டில் உள்ள புகழ்பெற்ற அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இது ஆதித்யாவின் முதல் வேலையின் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாகும்.
தந்தையின் நெகிழ்ச்சி
இவரைப் பற்றி விகாஸ் ஆல்வேஸ் என்பவர் எக் தளத்தில் பதிவிட்ட செய்தி இணையத்தில் வைரலாகியது. ஆதித்யாவின் தந்தை ஒரு புகைப்படக் கலைஞர் (P ஆவார். அவர் தனது மகனின் வெற்றி குறித்துப் பேசுகையில், “ஒரு புகைப்படக் கலைஞராக என்னால் முடிந்த அனைத்தையும் என் பிள்ளைகளுக்காகச் செய்தேன். இன்று என் மகன் என்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
புகைப்பட கலைஞர் நெகிழ்ச்சி
துணிச்சலாக வேலையை விட்டுவிட்டு, சரியான நேரத்தில் தொழில் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்ட ஆதித்யாவின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதேநேரம் ஒருவர் உயர்கல்வி முடித்த உடனேயே அமெரிக்காவில் 1.5 கோடி சம்பளம் பெறுவது என்பது சாத்தியமான ஒன்று தான். ஆனால் இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று வேலை தேடும் பலருக்கும் இது பிரம்மாண்டமாக தெரியும். ஆனால அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் ரூ.1.5 கோடி என்பது தொடக்க நிலை வேலைக்கே சாத்தியமான சம்பளம் என்று அங்கு பணியாற்றும் இந்திய ஐடி ஊழியர்கள் கூறுகிறார்கள்..
ஐடி ஊழியர்கள் கருத்து
தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா போய் செட்டில் ஆன ஐடி ஊழியர்கள் கூறுகையில், அமெரிக்காவில் அமேசான், கூகுள், மெட்டா போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் இந்த தொகைகளை வழங்குகின்றன. அடிப்படைச் சம்பளமே வருடத்திற்கு ₹85 லட்சம் – ₹1 கோடியாக இருக்கும். அவருக்கு முதல் வருடம் மட்டும் சேர்க்கை போனஸ் மற்றும் பங்குகள் (அமேசான் பங்குகளையும் தரும்) என மொத்தம் 50 லட்சம் வரை தருகின்றன. இவற்றை எல்லாம் சேர்த்தால் 1.5 கோடி சம்பளம் வரும்.
எவ்வளவு சேமிக்கலாம்
ஆனால் பலரும் கவனிக்க மறுக்கும் விஷயம் இருக்கிறது. அமெரிக்காவில் வாழ்க்கை செலவு இந்தியாவை ஒப்பிடும் போது பல மடங்கு அதிகம். இளைஞர் ஆதித்யா வேலைக்கு சேர்ந்துள்ள சீயாட்டில் ஒரு சாதாரண 1BHK வீட்டிற்கு மாத வாடகை மட்டுமே சுமார் ₹2 லட்சம் வரை இருக்கும். அதேபோல் அவரது சம்பளத்தில் வரிகள் மட்டுமே 1.5 கோடியில் சுமார் 30% முதல் 35% வரை போய்விடும். எனினும் அவரால் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 45 லட்சம் பணத்தை சாதாரணமாக சேமிக்க முடியும். சிக்கனமாக இருந்தால் இன்னும் கூடுலாகவே ஆண்டுக்கு அவரால் சேமிக்க முடியும் என்று ஐடி ஊழியர்கள் கூறுகிறார்கள்.



