பெங்களூரை உலுக்கிய அதிரடி ரைடு.. ரூ.55 கோடி போதை பொருள் கைப்பற்றிய போலீஸ்!
இந்தியாவின் ஐடி நகரமாக விளங்கும் பெங்களூரில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டறிந்த காவல் துறை, கடந்த சில வாரங்களாக ரகசிய கண்காணிப்பை செய்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட திடீர் சோதனையில் சுமார் 55.80 கோடி ரூபாய் அளவிலான போதைப்பொருள் கைப்பற்றியுள்ளது.
இந்த அதிரடி சோதனையில் போதை பொருள் விற்பனை செய்த சுமார் 39 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்ந அதிரடி ரைடு பெங்களூரில் இருக்கும் பல காவல் நிலையங்கள் இணைந்து நடத்தியது மூலம் 8 வெளிநாட்டவர், 21 வெளிமாநிலத்தவர், 10 உள்ளூர் மக்கள் என மொத்தம் 39 பேர் கொண்ட பெரிய நெட்வொர்க் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிடிப்பட்ட 39 பேரும் வெளிநாடுகளிலும், வெளி மாநிலத்திலும் மலிவான விலையில் போதை மருந்துகளை வாங்கி அதிக விலைக்கு பெங்களூரில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் ஐடி ஊழியர்கள், கல்லூர் மாணவர்கள் வரையில் பல தரப்பினருக்கு போதை பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.
இந்த அதிரடி ரைடுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூர் நகர கமிஷ்னர் சீமன்த் குமார் சிங் இந்த சோதனையில் 21.641 கிலோ எம்டிஎம்ஏ, 738 கிலோ கொக்கெய்ன், 4.493 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா. 184.625 கிலோ கஞ்சா, 1.065 கிலோ ஓபியம், 25 கிராம் மெபேடிரோன் ஆகியவை கைப்பற்றியுள்ளது. இதோடு 22 ஸ்மார்ட்போன், 5 பைக்குகள், 17 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் டெல்லியில் இருக்கும் ஆப்பிரிக்க போதை பொருள் சப்ளையர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு பெங்களூருக்கு சரக்குகளை வரவழைத்து விற்பனை செய்து வருவதையும் போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டு பிடித்துள்ளனர். பெங்களூர் போலீசார் கிரிநகர், விஷகோட்டே, அம்ருத்தஹள்ளி, யஷ்வந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரை கைது செய்துள்ளது.

