கோலாலம்பூரில் உள்ள ஒரு லாட்டரி கடைக்கு வெளியே இன்று காலை 62 வயது மூதாட்டி மீது பெட்ரோல் என சந்தேகிக்கப்படும் திரவம் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அந்தக் கடையில் உதவியாளராகப் பணிபுரிந்த மூதாட்டி, சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாகவும் செந்துல் காவல் துணைத் தலைவர் ஜஸ்னி ஜோல்பா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உடலில் சுமார் 50% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக ஜஸ்னி கூறினார்.
பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த எதிரிகள் யாரும் இல்லை என்றும், இதற்கு முன்பு அவருக்கு எந்த அச்சுறுத்தல்களும் வந்ததில்லை என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். மேலும், தாக்குதல் நடத்தியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் காவல்துறை தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணைக்கு உதவும் வகையில் பல டிஎன்ஏ மாதிரிகளையும் பிற பொருட்களையும் சேகரித்ததாக ஜஸ்னி கூறினார். சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக செந்துல் காவல்துறை ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி அம்ரி ஃபிர்தாஸ் ஜூசோவை 010-9198209 என்ற எண்ணிலோ, செந்துல் காவல் செயல்பாட்டு அறையை 03-40482222 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு ஜஸ்னி கேட்டுக்கொண்டார்.



